கே.எஸ்.ரவிகுமார் பிறந்த நாள் ஸ்பெஷல்: வெகுஜன ரசனையை அறிந்த வித்தக இயக்குநர்

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று 1980களைச் சொல்வதற்குப் பல காரணங்கள் உண்டு. நட்சத்திரங்களின் ஏகபோகப் பிடியிலிருந்து இயக்குநர்களின் கையும் ஓங்கி நின்றது அந்தக் காரணங்களில் முக்கியமானது. பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, மணிரத்னம் என புதிய கதைக் களங்களையும் திரைக்கதையில் யதார்த்தத்தின் ஆதிக்கத்தையும் பேரலையாகப் பாய்ச்சிய இயக்குநர்கள் கோலோச்சிய காலம் அது. அதே காலகட்டத்தில் எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஜி.என்.ரங்கராஜன், பாண்டியராஜன், ராபர்ட்-ராஜசேகர், ராஜசேகர் என வெகுஜன ரசனைக்கேற்ற அனைத்து அம்சங்களும் பொருந்திய ஜனரஞ்சகமான பிளாக் பஸ்டர் படங்களைக் கொடுத்துவந்த இயக்குநர்களும் கோலோச்சினர். 80களின் இறுதியிலும் 90களின் தொடக்கத்திலும் இந்த ஜனரஞ்சகப் பட இயக்குநர்களின் வரிசை பல திறமைசாலிகளின் வருகையால் இன்னும் விரிவடைந்தது. அத்தகு திறமைமிக்க இயக்குநர்களின் ஒருவரான கே.எஸ்.ரவிகுமாரின் பிறந்த நாள் இன்று (மே 30).

தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்களின் மெகா பட்ஜெட் திரைப்படங்களை இயக்கியிருப்பவரான ரவிகுமார் இயக்கிய முதல் படம் ஒரு சிறு முதலீட்டுப் படம். ‘புரியாத புதிர்’ என்ற தலைப்பிடப்பட்ட அந்தப் படம் பாடல்கள் இல்லாத ஒரு பரபரப்பான த்ரில்லர். ரவிகுமார் என்ற பெயரைக் கேட்டாலே நம் நினைவுக்கு வரும் படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட படம். விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

சரத்-ரவி இணை

அதற்குப் பிறகு ரவிகுமார் இயக்கிய படம் தான் ‘சேரன் பாண்டியன்’. அதுவரை வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்துவந்த சரத்குமார் கதாநாயகனாக உருமாற அடித்தளமிட்ட படம் அது. அந்தப் படத்திலும் சரத் கதாநாயகன் இல்லை. படத்தில் அவருக்கு ஜோடி கூட கிடையாது. இருந்தாலும் படத்தின் வெற்றியில் அவருடைய பங்களிப்பே பெரிதும் பேசப்பட்டது. நாயகனாக நடிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகரித்தன. அடுத்தடுத்து ‘பேண்டு மாஸ்டர்’, ‘நாட்டாமை’, ‘நட்புக்காக’, ‘சமுத்திரம்’ என ரவிகுமார் - சரத்குமார் இணை எட்டு படங்களில் இணைந்து தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இணைகளில் ஒன்றானது. குறிப்பாக ‘நாட்டாமை’ படம் மிகப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று தெலுங்கு,கன்னடம், இந்தி என பல மொழிகளில் ரீமேக் ஆனது. இன்னொரு பிரம்மாண்ட வெற்றிப் படமான ‘நட்புக்காக’ 18 மொழிகளில் ரீமேக் ஆனது.

நட்சத்திரங்கள் நாடிச் செல்லும் இயக்குநர்

காதல், சென்டிமென்ட், காமடி, ஆக்‌ஷன், நகைச்சுவை என அனைத்து ஜனரஞ்சக அம்சங்களுக்கும் இணையான முக்கியத்துவம் அளித்து திரைக்கதை அமைப்பதில் வல்லவராக விளங்கினார் ரவிகுமார். அதோடு இயக்குநராக அனைத்துக் கலைஞர்களையும் தொழில்நுட்ப வல்லுநர்களுடனும் சரியாகப் பணியாற்றும் அவர்களிடம் தனக்கு வேண்டியதைக் கேட்டுப்பெறுவதில் தனித் திறமை பெற்றிருந்தார். இதனாலேயே ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, கார்த்திக், அர்ஜுன், முரளி என 90-களின் நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறை நட்சத்திரங்களான அஜித், விஜய், சூர்யா ஆகியோரும் ரவிகுமார் இயக்கிய ஒரு படத்திலாவது நடித்தனர்.

தமிழ் சினிமாவில் தனித்த பாதை வகுத்தவராகவும் தலை சிறந்த படைப்புகளை இயக்கியவராகவும் சினிமாவின் அனைத்து நுணுக்கங்களிலும் தேர்ச்சி பெற்றவராகவும் விளங்கும் கமல்ஹாசனின் ஐந்து படங்களை ரவிகுமார் இயக்கியிருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூன்று படங்களை இயக்கியிருக்கிறார். முற்றிலும் வெவ்வேறு பாதைகளை வகுத்துக்கொண்டு இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமைகளாக நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கோலோச்சிவரும் இவ்விரு ஆளுமைகளின் மனதைக் கவர்ந்த இயக்குநராக இருப்பதிலிருந்தே ரவிகுமாரின் அசாத்திய திறமையையும் தனித்தன்மையையும் பணி நேர்த்தியையும் புரிந்து கொள்ளலாம்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியிருக்கிறார். இந்தியிலும் ஒருசில படங்களை இயக்கியிருக்கிறார்.

நடிப்பிலும் அசத்தியவர்

இயக்குநர் என்பதைத் தாண்டி நடிகராகவும் பல படங்களில் ரசிகர்கள் மனதைக் கவர்ந்தவர் ரவிகுமார். தான் இயக்கும் படங்கள் அனைத்திலும் ஒரு காட்சியிலாவது தலைகாட்டுவதை வழகமாக வைத்திருப்பவர் ரவிகுமார். ‘முத்து’, ‘படையப்பா’. ‘பஞ்சதந்திரம்’, ‘மின்சாரக் கண்ணா’ போன்ற படங்களில் அவர் ஒரு சில காட்சிகளில் வந்து சென்றாலும் மறக்க முடியாத முத்திரையைப் பதித்திருப்பார். மற்ற இயக்குநர்களின் படங்களிலும் வில்லன், குணச்சித்திரம். காமடி வேடங்களில் நடித்திருக்கிறார். அண்மைய ஆண்டுகளில் ‘தங்க மகன்’ படத்தில் மறதியால் அவதிப்படும் நடுத்தர வயது வங்கி ஊழியராகவும், ’விண்ணைத்தாண்டி வருவாயா’, ’ரெமோ’ படங்களில் இயக்குநராகவும் ’கோமாளி’ படத்தில் வில்லத்தனம் நிறைந்த அரசியல்வாதியாகவும் ‘அயோக்யா’ படத்தில் நேர்மையான காவலராகவும் வெகு சிறப்பாக நடித்திருந்தார்.

தயாரிப்பாளர்களின் இயக்குநர்

இயக்குநராக தனக்கு நற்பெயர் கிடைப்பதைவிட பணத்தை முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் லாபம் கிடைப்பதை உறுதி செய்வதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் ரவிகுமார். கமர்ஷியல் படங்களைத் தாழ்வாகப் பார்க்கும் மனநிலை உடையவர்கள் இவருடைய முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவார்கள். ஆனால் வெகுஜன மக்களின் மனங்களில் என்றுமே மரியாதைக்குரிய இடத்தைப் பெற்றவராக நிலைத்திருக்கும் ஆளுமை உடையவர் ரவிகுமார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் உட்பட பல பெரும் நட்சத்திர நடிகர்களுக்கு அவர்களுடைய திரைவாழ்வில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்திய பிளாக் பஸ்டர் படங்களைக் கொடுத்தவர் ரவிகுமார். நட்சத்திரங்களின் இயக்குநர் மட்டுமல்ல. தயாரிப்பாளர்களின் இயக்குநரும்கூட.

முதல் படத்திலேயே திட்டமிட்டதைவிட ஒரு நாள் முன்னதாகவே படப்பிடிப்பை முடித்து தயாரிப்பாளரின் செலவை மிச்சப்படுத்தியவர் என்று கூறப்படுவதுண்டு. அதேபோல் ’ரெமோ’ படத்தில் தான் நடித்துக் கொடுக்க வேண்டிய காட்சிகள் சில நாட்கள் முன்னதாகவே எடுத்து முடிக்கப்பட்டுவிட்டதால் மீதமான நாட்களுக்குத் தான் பெற்றுக்கொண்ட ஊதியத்தை தயாரிப்பாளரிடம் திருப்பிக் கொடுத்தவர். அந்த வகையில் இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தயாரிப்பாளர்களின் நலனில் அக்கறை கொண்டவர்.

இத்தனை சிறப்புகளை மிக்க கே.எஸ்.ரவிகுமார் இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்து ஒரு இயக்குநராகவும் நடிகராகவும் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்