திரையரங்குகள்தான் நட்சத்திரங்களை உருவாக்கியுள்ளது; ஓடிடி அல்ல: அர்ச்சனா கல்பாத்தி

By செய்திப்பிரிவு

திரையரங்குகள்தான் நட்சத்திரங்களை உருவாக்கியிருக்கிறது. ஓடிடி அல்ல என்று ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் தமிழ்த் திரையுலகம் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. வெள்ளித்திரை, சின்னத்திரை படப்பிடிப்புகள் எதுவுமே நடைபெறவில்லை. இதனால் தினசரித் தொழிலாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு பெப்சி அமைப்பு திரையுலகினரிடமிருந்து உதவிகள் வாங்கிக் கொடுத்துள்ளது.

இதனிடையே திரையரங்க வெளியீட்டுக்குத் தயாராக இருந்த படங்கள் யாவுமே திட்டமிட்டபடி வெளியாகவில்லை என்பதால் தயாரிப்பாளர்களும் வட்டி கட்டிக் கொண்டே இருந்தனர். இந்தச் சமயத்தில் டிஜிட்டல் வெளியீட்டுக்கு அமேசான் நிறுவனத்தினர் பேசவே, அங்கு பல்வேறு படங்கள் வெளியாகவுள்ளன.

நாளை (மே 28) முதல் படமாக 'பொன்மகள் வந்தாள்' வெளியாகவுள்ளது. இந்த ஓடிடி வெளியீட்டுக்கு விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே தயாரிப்பாளராகவும் இருந்துகொண்டு திரையரங்குகளையும் நிர்வாகித்து வருகிறது ஏஜிஎஸ் நிறுவனம்.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி, ஓடிடி வெளியீடு குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

"மல்டி ப்ளக்ஸைப் பொறுத்தவரை நாங்கள் இதுவரை ஊழியர்களுக்குச் சம்பளத்தைக் குறைக்கவில்லை. வாடகை கட்டிக் கொண்டிருக்கிறோம். இதெல்லாம் என்றும் மாறாத நிலையான செலவுகள். ரசிகர்கள் மீண்டும் உள்ளே வர திரைப்படங்கள் வேண்டும். ஆனால் தயாரிப்பாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வேண்டும் இல்லையா? ஒவ்வொரு நாளும் வட்டி அதிகமாகும். திரையரங்கத் தரப்பு தயாரிப்பாளர்களைக் காத்திருக்கச் சொல்லலாம் ஆனால் அவர்களின் வட்டி செலவுக்கு உதவ முடியாது. அப்படியென்றால் தப்பிக்கத் தேவையான வழிகளைத் தயாரிப்பாளர்கள் தேடித்தான் ஆக வேண்டும்.

7 படங்கள் ஓடிடியில் வெளியாவதைப் பார்க்கிறோம். ஆனால், இன்னும் பல நூறு படங்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லாமல் இருக்கின்றன. இது ஒரு தனித்துவமான சூழல். படத்தைத் பார்த்து முடிவு செய்யும் வாய்ப்பு ஓடிடி தரப்புக்கு இருக்கிறது. ஆனால், நிலைமை சகஜமான பின் எந்த தயாரிப்பாளரும் படத்தை முன்கூட்டியே காட்ட மாட்டார்கள். அப்படியென்றால் படத்தின் மதிப்பை எப்படி மதிப்பிடுவார்கள்? திரையரங்கில் படம் எப்படி ஓடுகிறது என்பதை வைத்துதான். இப்போது தயாரிப்பாளர்கள் பிழைத்திருக்க முயல்கின்றனர். திரையரங்க வெளியீடு இல்லாமல் ஒரு தயாரிப்பாளரால் போட்ட பணத்தைத் திரும்ப எடுக்கவே முடியாது.

பெரிய நடிகர்களும் விரைவில் ஓடிடிக்கு வருவார்கள். ஜனரஞ்சக சினிமாவில் அவர்களால் செய்ய முடியாத பரிசோதனைகளை ஓடிடியில் செய்யலாம். ஓடிடி என்பது திரையரங்க வெளியீட்டுக்குப் போட்டி அல்ல. ஓடிடி வேறு வகையான குறிப்பிட்ட ரசிகர்களுக்கானது. முக்கியமாக, திரையரங்குகள்தான் நட்சத்திரங்களை உருவாக்கியிருக்கிறது. ஓடிடி அல்ல".

இவ்வாறு அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE