'கஜினி' ஒப்புக் கொண்டது ஏன்? படப்பிடிப்பு அனுபவங்கள்: சூர்யா பகிர்வு

By செய்திப்பிரிவு

'கஜினி' படத்தை ஒப்புக்கொண்டது குறித்தும், அதன் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்தும் சூர்யா பகிர்ந்துள்ளார்.

2005-ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் 'கஜினி'. செப்டம்பர் 29-ம் தேதி வெளியான இந்தப் படத்தில் அசின், நயன்தாரா, ப்ரதீப் ராவத், ரியாஸ் கான், மனோபாலா, சத்யன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்தப் படத்தின் பாடல்கள் தொடங்கி கதையமைப்பு என அனைத்துமே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் இந்தி ரீமேக்கில் ஆமிர் கான் நடித்தார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய அந்தப் படமும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

'பொன்மகள் வந்தாள்' படத்தை விளம்பரப்படுத்த சூர்யா - ஜோதிகா இணை இணைந்து பேட்டியொன்றை அளித்துள்ளனர்.

அதில்," 'கஜினி' வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிறது. அந்தப் படத்தின் நினைவுகள் ஏதேனும் சொல்ல முடியுமா?" என்ற கேள்விக்கு சூர்யா கூறியிருப்பதாவது:

"முருகதாஸ் சார் அந்தக் கதையைச் சொல்லும்போது என்னால் இதில் ஒழுங்காக நடிக்க முடியுமா என்ற பிரமிப்புதான் ஏற்பட்டது. இந்தக் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்ய முடியுமா என்று தோன்றியது. அந்த அழுத்தம்தான் என்னை ஒப்புக்கொள்ளச் செய்தது என்று நினைக்கிறேன். எங்களிடம் திரைக்கதை இருந்தது. அதை எப்படி திரையில் கொண்டு வருவது என்பதை நாங்கள் பேசிப் பேசி முடிவு செய்தோம்.

இந்தப் படத்துக்காக என் மருத்துவ நண்பரிடம் கலந்தாலோசித்தேன். நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரைப் பார்த்தேன். அவர்களிடம் அது குறித்த நூலகம் இருந்தது. அறுவை சிகிச்சைக்குப் பின் நோயாளி எப்படி நடந்து கொள்வார் என அவர்களிடம் விவரங்கள் இருந்தன. காணொலிகள் இருந்தன. எல்லாவற்றையும் பார்த்தேன், படித்தேன்.

ஒரு காஃபி ஷாப்பில் உட்கார்ந்து யோசிக்கும்போது தலையில் அந்தக் கோடு போடும் யோசனை வந்தது. அறுவை சிகிச்சைக்குப் பின் தலையில் தையல் எப்படித் தெரியும் என்று தெரிந்துகொண்டேன். இந்த அத்தனை விஷயங்களும் படப்பிடிப்புக்கு முன்னால் எழுதி வைக்கப்பட்டன. ஆர்.டி.ராஜசேகர், முருகதாஸ் என அனைவரும் சேர்ந்துதான் யோசித்து உருவாக்கினோம். அது அற்புதமான அனுபவம்".

இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE