திரையரங்க வசூலை அதிகரிக்கும் வழி: அர்ச்சனா கல்பாத்தி யோசனை

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் திரையரங்க வசூலை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை. நான்காம் ஊரடங்கும் மே 31-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதற்குப் பிறகு நீட்டிக்கப்படுமா என்பது இன்னும் முடிவாகவில்லை.

இதனிடையே கரோனா அச்சுறுத்தல் முடிந்து திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பதும் இன்னும் முடிவாகவில்லை. திரையரங்க வெளியீட்டுக்கு பல்வேறு படங்கள் தயாராகவுள்ளனர். அதிலும் பழைய மாதிரி திரையரங்கில் படம் பார்க்க மக்கள் வருவார்களா என்ற பெரிய கேள்வியும் திரையரங்க உரிமையாளர்களிடம் இருக்கிறது. பலரும் இது தொடர்பாக அச்சத்திலேயே இருக்கிறார்கள்.

திரையரங்குகள் திறந்த பின் குறைவான கூட்டம் வந்தாலும், காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு அனுமதி அளித்தால் வருமானத்தில் பெரிய பாதிப்பு இருக்காது என்று தெரிவித்துள்ளார் ஏஜிஎஸ் சினிமாஸ் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி.

இது தொடர்பாக 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அர்ச்சனா கல்பாத்தி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது;

"வார இறுதிகளில் 80 சதவீத இருக்கைகள் நிரம்புகின்றன. வார நாட்களில் 25 சதவீத இருக்கைகள் நிரம்புகின்றன. காலை, அதிகாலை காட்சிகளைத் திரையிட அரசு அனுமதித்தால் தினமும் நான்கு காட்சிகள் என்பதை எட்டு காட்சிகளாக அதிகரிப்போம். எப்படியும் பெரிய நடிகர்களின் படங்களுக்கு ரசிகர்கள் வருவார்கள். வார நாட்களிலும் கூட்டம் அதிகரிக்கும்"

இவ்வாறு அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE