'அய்யப்பனும் கோஷியும்' தமிழ் ரீமேக்கில் யார்?

By செய்திப்பிரிவு

'அய்யப்பனும் கோஷியும்' தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளவர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமுள்ளன.

பிப்ரவரி 7-ம் தேதி வெளியான மலையாளப் படம் 'அய்யப்பனும் கோஷியும்'. திரைக்கதை ஆசிரியர் சச்சியை இயக்குநராகவும் வெற்றி பெறச் செய்துள்ள இந்தப் படத்தில் பிஜுமேனன், பிரித்விராஜ் இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றப் பலரும் போட்டியிட்டனர். இறுதியாக 'ஜிகர்தண்டா', 'ஆடுகளம்' படத்தின் தயாரிப்பாளரான பைவ் ஸ்டார் கதிரேசன் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருப்பவர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமுள்ளன.

முதலில் பிஜுமேனன் கதாபாத்திரத்தில் சரத்குமாரும், ப்ரித்விராஜ் கதாபாத்திரத்தில் சசிகுமாரும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இந்தப் படத்தில் சரத்குமார் நடிக்கவில்லை. ஆரம்பத்திலிருந்தே சசிகுமார் நடிப்பது மட்டுமே உறுதியாகியுள்ளது.

ப்ரித்விராஜ் கதாபாத்திரத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியானது. ஆனால் ஆர்யாவோ "'அய்யப்பனும் கோஷியும்' தமிழ் ரீமேக்கில் நடிக்கவில்லை" என்று பேட்டியே கொடுத்துவிட்டார். இதனால் சசிகுமாருடன் நடிக்கவுள்ளவர் யார் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

இதற்கிடையே படக்குழுவினரோ யார் இயக்குநர், யார் நடிகர் என்பது உள்ளிட்ட எந்தவொரு அதிகாரபூர்வ தகவலையும் வெளியிடவில்லை. அனைத்து நடிகர்களும் முடிவானவுடன் அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE