'சுப்பிரமணியபுரம்' படத்தின் கதாபாத்திரங்கள் தேர்வு; 2-ம் பாகம் உருவாகுமா?- சாந்தனுவின் கேள்விக்கு சசிகுமார் பதில்

By செய்திப்பிரிவு

'சுப்பிரமணியபுரம்' படத்தின் கதாபாத்திரங்கள் தேர்வு குறித்தும், 2-ம் பாகம் உருவாக்கம் குறித்தும் சாந்தனுவின் கேள்விக்கு சசிகுமார் பதிலளித்துள்ளார்.

2008-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி வெளியான படம் 'சுப்பிரமணியபுரம்'. சசிகுமார் இயக்கி, நடித்து, தயாரித்திருந்தார். ஜெய், சமுத்திரக்கனி, ஸ்வாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பில் உருவான படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில் முதலில் ஜெய் கதாபாத்திரத்தில் சாந்தனு நடிப்பதாக இருந்தது. பல்வேறு காரணங்களால் இந்தப் படத்தில் சாந்தனு நடிக்கவில்லை.

இந்த கரோனா ஊரடங்கில் ஆடை வடிவமைப்பாளர் சத்யாவுடன் சசிகுமார் நேரலைக் கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அப்போது சசிகுமாரிடம் சில பிரபலங்கள் கேள்வி எழுப்பினார்கள். அவர்களுக்கு சசிகுமார் பதில் அளித்தார்.

அந்தப் பகுதி:

சாந்தனு: 'சுப்பிரமணியபுரம் 2' எப்போது நடக்கப் போகிறது? அதில் நடிக்க வாய்ப்பு வேண்டும். 'சுப்பிரமணியபுரம்' நான் மிஸ் பண்ணிய ஒரு படம். அந்தப் படத்தை தவறவிட்டத்துக்கு ரொம்பவே வருந்துகிறேன். கண்டிப்பாக 2-ம் பாகத்தை மிஸ் பண்ண மாட்டேன். அந்தப் படத்தில் 80-ம் ஆண்டு காட்சிகளுக்காக ரொம்பவே டீட்டெயில் பண்ணியிருந்தீர்கள்.

சசிகுமார்: 'முந்தானை முடிச்சு' படத்தில் பாக்யராஜ் சார் கேரக்டரில் நான் நடிப்பது மகிழ்ச்சி. உங்களுடைய 3 படங்கள் பண்ணனும் என ஆசை என்றேன். அதில் ஒன்று திட்டமிட்டு, நடக்கவில்லை. 'முந்தானை முடிச்சு' ரீமேக் சரியாக அமைந்தது.

'சுப்பிரமணியபுரம் 2' பண்ணுவதற்கு எல்லாம் அப்போதிலிருந்தே விருப்பம் இல்லை. ஒரே ஒரு 'சுப்பிரமணியபுரம்' தான் என்று முடிவு பண்ணிய விஷயம். 2-ம் பாகம் எடுத்தால் இப்படியெல்லாம் போகும் அல்லவா என்று விளையாட்டுக்குப் பேசியிருக்கோம். 'சுப்பிரமணியபுரம்' 2-ம் பாகம் என்பது எண்ணத்திலேயே இல்லை.

ரீமேக் பண்ணுவதற்குக் கூட விருப்பமில்லை. இந்தியில் பண்ணலாம் என நினைத்தேன். அதையும் விட்டுவிட்டேன். இன்னொரு படம் பண்ணுவேன். அதில் கண்டிப்பாக சாந்தனுவுக்கு ஒரு கேரக்டர் இருக்கும். லைவ்வில் சொல்லிவிட்டதால் அது உண்மையாக நடக்கும்.

'சுப்பிரமணியபுரம்' படத்தில் என் கேரக்டர் அல்லது அழகர் கேரக்டர் இரண்டில் எதிலாவது ஒன்றில் சாந்தனுவை நடிக்க வைக்கத் திட்டமிட்டேன். முதலில் 'சுப்பிரமணியபுரம்' படத்தை பாக்யராஜ் சார் பையன், பாண்டியராஜன் சார் பையன் என இருவரையும் வைத்துதான் திட்டமிட்டேன். வெவ்வேறு காரணங்களால் திட்டமிட்டபடி அமையவில்லை.

இவ்வாறு சசிகுமார் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE