படப்பிடிப்பு ‘செட்’ சேதப்படுத்திய வழக்கு: இருவர் கைது

கேரளாவில் மலையாள முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் நாயகனாக நடிக்கும் ‘மின்னல் முரளி’ படத்துக்காக, எர்ணாகுளம் அருகே காலடியில் ரூ.50 லட்சம் செலவில் கிறிஸ்தவ தேவாலயத்தின் ‘செட்’ அமைக்கப்பட்டிருந்தது. இது இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது எனக் கூறி, வலதுசாரி அமைப்பினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த ‘செட்’டை சேதப்படுத்தினர்.

அந்தராஷ்ட்ர ஹிந்து பரிஷத், ராஷ்ட்ரிய பஜ்ரங் தளம் ஆகியஅமைப்புகள் இதற்கு பொறுப்பேற்றன. ஆதி சங்கராச்சாரியார் மடத்துக்கு அருகில் இந்த ‘செட்’ அமைக்கப்பட்டிருப்பதாக அவை காரணம் கூறின. இந்த சம்பவம் மலையாள திரையுலகினரை அதிர்ச்சி அடையச் செய்தது. பிரபலங்கள் பலர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் ரதீஷ் மலயத்தூர் (ராஷ்ட்ரிய பஜ்ரங் தளம் அமைப்பின் எர்ணாகுளம் மாவட்டத் தலைவர்), ராகுல் ஆகிய இருவரை கேரள போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். ராஷ்ட்ரிய பஜ்ரங் தளம் உறுப்பினர்கள் 7 பேர் மற்றும் பலர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE