'க/பெ. ரணசிங்கம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'க/பெ. ரணசிங்கம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'க/பெ. ரணசிங்கம்'. பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்த பெரிய கருப்பத்தேவரின் மகன்தான் இயக்குநர் பெ.விருமாண்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிக்கட்டப் பணிகளில் மும்முரமாக இருக்கும் படக்குழு, தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தை பின்னணி இசைக்காகப் பார்த்துவிட்டு ஜிப்ரான் படக்குழுவினரைப் பாராட்டியிருந்தார். அதில் 'அறம்' படத்தோடு ஒப்பிட்டுப் பாராட்டியதால், இந்தப் படத்தை பலரும் எதிர்நோக்கியுள்ளனர்.

தற்போது 'க/பெ ரணசிங்கம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, 'பூ' ராம், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE