இந்தியா திரும்பியது ’ஆடுஜீவிதம்’ படக்குழு: தனிமைப்படுத்தப்பட்ட ப்ரித்விராஜ்

நடிகர் ப்ரித்விராஜின் 'ஆடுஜீவிதம்' படக்குழுவினர் ஜோர்டன் நாட்டிலிருந்து இந்தியா திரும்பியுள்ளனர்.

இயக்குநர் ப்ளெஸ்ஸி, நடிகர் ப்ரித்விராஜ் உட்பட 58 பேர் கொண்ட படக்குழு, படப்பிடிப்புக்காக ஜோர்டன் நாட்டுக்குச் சென்றது. கரோனா நெருக்கடியைத் தொடர்ந்து அந்த நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அங்கிருந்து திரும்ப முடியாத நிலை இருந்ததால் படப்பிடிப்பைத் தொடர்ந்தது படக்குழு.

மத்திய அரசின் வந்தே பாரத் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, வெளிநாட்டில் சிக்கியிருக்கும் இந்தியர்களைத் தாய்நாட்டுக்கு அழைத்து வரும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், ஜோர்டன் நாட்டிலிருந்த 187 இந்தியர்கள் தாய்நாடு திரும்பியுள்ளனர். இதில் 'ஆடுஜீவிதம்' குழுவினரும் அடக்கம்.

இதுகுறித்துப் பேசிய இயக்குநர் ப்ளெஸ்ஸி, "மருத்துவத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் நாங்கள் கோவிட்-19 பரிசோதனை மையத்துக்குச் சென்று கொண்டிருக்கிறோம். மீண்டும் கேரளா திரும்பியது நிம்மதியாக இருக்கிறது. ஜோர்டனில் முடிக்க வேண்டிய படப்பிடிப்பை இன்னும் முடிக்கவில்லை. சகஜ நிலை திரும்பியவுடன் அதை முடிப்போம் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

இந்தக் குழுவினர் அனைவரும் விதிமுறைகளின்படி குறிப்பிட்ட காலம் வரை தனிமைப்படுத்தப்படுவார்கள். கொச்சியில் இருக்கும் கட்டணத் தனிமைப்படுத்தல் மையத்தை படக்குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

தனிமைப்படுத்தப்பட ஸ்டைலாகச் செல்கிறேன் என நடிகர் ப்ரித்விராஜ், விமான நிலையத்திலிருந்து புறப்படும் புகைப்படத்தோடு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஏப்ரல் கடைசி வாரம் 'ஆடுஜீவிதம்' குழுவுக்குப் படப்பிடிப்பைத் தொடர அனுமதி அளிக்கப்பட்டது. இதில் ப்ரித்விராஜ் சம்பந்தப்பட்ட முக்கியக் காட்சிகளை வாடி ரம் பாலைவனத்தில் படம்பிடித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE