ரசிகர்களின் வேண்டுதல் பலித்தது: வெளியாகிறது ஜஸ்டிஸ் லீக்: ஸ்னைடர் கட்

டிசி ரசிகர்களின் வேண்டுதல்களுக்குப் பலன் கிடைத்துள்ளது. வார்னர் பிரதர்ஸ் தரப்பு 'ஜஸ்டிஸ் லீக்' படத்தின் ஸ்னைடர் கட் பதிப்பை ஹெச்பிஓ மேக்ஸ் ஸ்ட்ரீமிங் சேவையில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.

மார்வல் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை வைத்துத் தனி வரிசைப் படங்கள் உருவாவதைப் போல டிசி காமிக்ஸ் கதாபாத்திரங்களை வைத்தும் வார்னர் ப்ரதர்ஸ் படங்கள் எடுத்து வருகிறது. மார்வலின் முக்கிய சூப்பர் ஹீரோக்கள் அனைவரும் 'அவெஞ்சர்ஸ்' என்ற பெயரில் இணைவதைப் போல, டிசி சூப்பர் ஹீரோக்கள் கூட்டணிக்கு 'ஜஸ்டிஸ் லீக்' என்று பெயர்.

2017-ம் ஆண்டு 'ஜஸ்டிஸ் லீக்' திரைப்படம் வெளியானது. ஏற்கனவே டிசி சினிமா உலகில் 'மேன் ஆஃப் ஸ்டீல்', 'பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஸேக் ஸ்னைடர், 'ஜஸ்டிஸ் லீக்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளின் போது ஸ்னைடரின் மகள் தற்கொலை செய்து கொண்டதால் ஸ்னைடரால் படத்தின் வேலைகளைத் தொடர்ந்து கவனிக்க முடியாமல் போனது.

படத்தில் சில கூடுதல் காட்சிகளைச் சேர்க்க, 'அவெஞ்சர்ஸ்' முதல் இரண்டு பாகங்களை இயக்கிய ஜாஸ் வீடன் உதவியை ஸ்னைடர் ஏற்கெனவே நாடியிருந்ததால், வீடனை வைத்து படத்தை முடிக்க வைத்தது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம். தொடர்ந்து படத்தின் சில பகுதிகள் மீண்டும் படப்பிடிப்பு செய்யப்பட்டன. படம் வெளியாகி கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது. லாபகரமான படமாக இருந்தாலும் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை.

ஆனால் வெளியான படம், அசல் இயக்குநர் ஸாக் ஸ்னைடரின் பார்வையிலிருந்து விலகி விட்டதாகவும், ஸ்னைடர் எடுத்து முடித்த பதிப்பை வார்னர் பிரதர்ஸ் வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழ ஆரம்பித்தன. 2019-ம் வருடம் ஒரு பேட்டியில், ஸாக் ஸ்னைடரும் தனது பதிப்பு என்ற ஒன்று தனியாக எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது என்றும், அதை வெளியிடுவது வார்னர் பிரதர்ஸின் முடிவுதான் என்றும் கூறினார். இதனால் ஸ்னைடர் பதிப்பை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. #ReleaseTheSnyderCut என்று தனியாக ஒரு இயக்கம் போல ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டு வந்தது.

தற்போது ஸ்னைடர் பதிப்பு வெளியிடப்படும் என வார்னர் பிரதர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால், திரையரங்கில் வெளியிடாமல் ஹெச்பிஓ மேக்ஸ் ஸ்ட்ரீமிங் சேவையில் இந்தப் பதிப்பு வெளியாகவுள்ளது. 2021-ம் ஆண்டு, 4 மணி நேரத் திரைப்படமாகவோ அல்லது 6 பகுதிகளாக பிரிக்கப்பட்ட தொடராகவோ ஜஸ்டிஸ் லீக்கின் ஸ்னைடர் பதிப்பு வெளியாகும்.

புதன்கிழமை நடந்த ஒரு இணையக் கேள்வி பதில் நிகழ்ச்சியில் ஸ்னைடர் இதை உறுதி செய்தார். இதையொட்டி வார்னர் பிரதர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நிறைய மக்களின் முயற்சிக்கு நன்றி. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜஸ்டிஸ் லீக்கின் பதிப்பை வெளியிடுவதில் நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம். ஸாக்கின் பதிப்பை பகிர இதுதான் சரியான நேரம், ஹெச்பிஓ மேக்ஸ் தான் சரியான தளம் என்று நினைக்கிறோம். ஸ்னைடர் பதிப்பை வெளியிட ஏதுவான காலம் வந்துள்ளதில் எங்களுக்கு மகிழ்ச்சி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வார்னர் பிரதர்ஸ் மற்றும் ஹெச்பிஓ மேக்ஸுக்கு நன்றி சொல்லியிருக்கும் ஸ்னைடர், "கலைஞர்களின் உண்மையான பார்வைக்கு வடிவம் தரும் இந்த துணிச்சலான முடிவுக்கு நன்றி. ஸ்னைடர் பதிப்பை வெளியிட வேண்டும் என்று ஒரு இயக்கம் போல செயல்பட்டு அதை நிஜமாக்கிய அனைவருக்கும் விசேஷமான நன்றிகள்" என்று பகிர்ந்துள்ளார். சூப்பர் மேனாக நடிக்கும் ஹென்றி கேவில், ஆக்வாமேனாக நடிக்கும் ஜேஸன் மோமோ, சைபார்க்காக நடிக்கும் ரே ஃபிஷர் ஆகியோரும் வார்னர் பிரதர்ஸின் முடிவை வரவேற்றுள்ளனர்.

இந்தப் பதிப்பை முடிக்கத் தேவைப்படும் கிராபிக்ஸ், இசை, படத்தொகுப்புக்கு என வார்னர் பிரதர்ஸ் தரப்பு 20-லிருந்து 30 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவழிக்கவுள்ளதாகத் தெரிகிறது. மேலும் சில காட்சிகளை மீண்டும் படம்பிடிக்க ஹென்றி கேவில், பென் ஆஃப்லெக், கால் கேடட், ரே ஃபிஷர், எஸ்ரா மில்லர், ஜேஸன் மோமோ ஆகியோரும் சம்மதித்து முன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE