ஒளிப்பதிவாளர் செழியனுக்கு முக்கிய கௌரவம்!

By செய்திப்பிரிவு

‘டுலெட்’ படத்தை எழுதி, இயக்கியதின் மூலம் 150-க்கும் அதிகமான சர்வதேச விருதுகளையும் பரிசுகளையும் வென்றார் ஒளிப்பதிவாளர், எழுத்தாளர் செழியன். பின்னர் அதற்கு தேசிய விருதும் கிடைத்தது. திரையரங்குகளில் வெளியாகி பல மடங்கு லாபமும் ஈட்டியது. கான் படவிழாவின் போட்டிப்பிரிவில் கலந்துகொண்ட ‘டுலெட்’ படத்தை பார்த்துப் பாராட்டினார், கான் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்த சர்வதேச இயக்குநர்களில் ஒருவரான அஸ்கார் பர்ஹதி.

தற்போது ‘டுலெட்’ படத்தின் இயக்குநரான செழியனுக்கு அகில இந்திய அளவிலான முக்கிய கௌரவம் ஒன்று கிடைத்துள்ளது. அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் சினிமட்டோகிராபர்ஸ் அமைப்பு, உலக அளவில் பெயர்பெற்றது. ஒளிப்பதிவுத் துறையில் சாதனை படைப்பவர்களையும் ‘ட்ரெண்ட் செட்டர்’களையும் அதில் உறுப்பினராக இணைத்து கௌரவம் செய்வார்கள். அதேபோல் இண்டியன் சொசைட்டி ஆஃப் சினிமட்டோகிராபர்ஸ் அமைப்பில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதும் பெரும் கௌரவம் என்பதை திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சமூகம் ஆமோதிக்கிறது. அந்த கௌரவம் ஒளிப்பதிவாளர், இயக்குநர் செழியனைத் தேடி வந்திருக்கிறது. இண்டியன் சொசைட்டி ஆஃப் சினிமட்டோகிராபர்ஸ் அமைப்பு செழியனை உறுப்பினராகத் தேர்ந்தெடுத்து கௌரவம் செய்திருப்பதை, அந்த அமைப்பு அதிகாரபூர்வமான கடிதம் மூலம் உறுதி செய்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE