திரைப்பார்வை: ‘கார்த்திக் டயல் செய்த எண்’ - முதிர்ச்சியான ஜெஸியும் கார்த்திக்கின் குன்றாத காதலும்

நேற்று இரவிலிருந்து தமிழ் சினிமாவின் தலை சிறந்த காதல் படங்களில் ஒன்றான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ரசிகர்கள் நினைவுகளில் நிறைந்துள்ளது. பொதுவாக அந்தப் படம் தொலைக்காட்சியில் திரையிடப்படுவதாலோ அந்தப் படம் வெளியான நாளன்று சமூக வலைத்தளப் பதிவுகள் மூலமாகவோ இது நடைபெறும். இந்த முறை ஒரு குறும்படம் மூலமாக இந்த நினைவு மீட்டல் நிகழ்ந்துள்ளது.

‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த 12 நிமிடக் குறும்படத்தை ‘விண்ணைத் தாண்டி வருவாயா’வின் தொடர்ச்சி எனலாம். அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுவது குறித்து அடிக்கடி செய்திகள் வெளியாகிவந்த நிலையில் படம் வெளியாகி பத்தாண்டுகள் கழித்து ஒரு குறும்படமாக ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தொடர்ச்சி நிகழ்ந்திருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மீண்டும் இணைந்த வெற்றிக் குழு

இயக்குநர் கெளதம் மேனன், கார்த்திக்காக சிம்பு, ஜெஸியாக த்ரிஷா, ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ஆண்டனியின் படத்தொகுப்பு என ‘விண்ணைத்தாண்டி வருவாயா' குழுவின் முக்கிய அங்கத்தினர் இந்தக் குறும்படத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் அனைவரும் அவரவர் இடங்களிலிருந்த நிலையில் ஐபோன் மூலம் இந்தப் படத்தைப் படமாக்கியிருக்கிறார் கெளதம் மேனன். அந்த வகையில் இது ஒரு வரவேற்கத்தக்க புது முயற்சி. கடந்த நூறாண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தில் எத்தனையோ மாற்றங்களைக் கண்டுவந்துள்ள சினிமாவில் அடுத்தகட்ட மாற்றத்துக்கான தொடக்கமாக இது அமையக்கூடும்.

’விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் காவிய அந்தஸ்தைப் பெற்றுவிட்ட கார்த்திக்-ஜெஸி இணையின் பத்தாண்டுகளுக்குப் பிந்தைய தொலைபேசி உரையாடல்தான் இந்தக் குறும்படத்தின் களம். அந்த உரையாடலைப் பார்ப்பதும் கேட்பதும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ரசிகர்களுக்கும் கார்த்திக்குடனும் ஜெஸியுடனும் தம்மையும் தமது கடந்த காலக் காதலர்களையும் அடையாளப்படுத்திக் கொள்வோருக்கும் நிச்சயமாக ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும்.

அவநம்பிக்கையைத் தகர்க்கும் உரையாடல்

திருமணத்துக்குப் பிறகு இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கும் ஜெஸி, முன்பைவிட முதிர்ச்சியான பெண்ணாகியிருக்கிறாள். கார்த்திக் சில படங்களை இயக்கி முடித்துவிட்டு கரோனா ஊரடங்கு முடக்கத்துக்குப் பிறகு சினிமாத் துறையில் தனது எதிர்காலம் குறித்தும் அடுத்த படம் அமையுமா அமையாதா என்ற நம்பிக்கையற்ற சூழலில் இருக்கிறான். ஆனால் ஜெஸி மீதான அவனுடைய காதல் மட்டும் அப்படியே இருக்கிறது. பத்தாண்டுகளுக்குப் பிந்தைய ஜெஸியுடனான உரையாடல் கார்த்திக்கின் அவநம்பிக்கையைத் தகர்க்கிறது. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் முடிவில் நிகழ்ந்ததைப் போலவே மீண்டும் வருங்காலத்தை நோக்கி நகர்ந்து செல்கிறான் (Moving on) கார்த்திக்.

இருவருக்கும் இடையிலான உரையாடலில் கரோனா தொற்று, தன்னார்வலர்களின் சமூக நலப் பணிகள் என சம கால விஷயங்களையும் இயக்குநர் மணிரத்னத்தின் காவியப் படைப்புகளில் ஒன்றான ‘மெளன ராகம்’ குறித்த உரையாடலைச் சேர்த்திருப்பது அழகுக்கு அழகு கூட்டுகிறது.

திரைத்துறையில் 15 ஆண்டுகளைக் கடந்துவிட்ட சிம்பு, த்ரிஷா இருவருமே முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் கார்த்திக்-ஜெஸி கதாபாத்திரங்களுக்குள் வெகு இயல்பாகவும் அழகாகவும் கூடு பாய்ந்திருக்கிறார்கள்.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துக்காக ரஹ்மான் இசையமைத்த ‘மன்னிப்பாயா’ உள்ளிட்ட சில பாடல்களின் இசைத் துணுக்குகள் தவிர இந்த குறும்படத்துக்கென்றே சில சில பிரத்யேக இசைத் துணுக்குகளை உறுத்தாமல் சேர்த்திருக்கிறார் ரஹ்மான். அவையும் காட்சிகளின் தன்மைக்குப் பொருத்தமாக அமைந்திருக்கின்றன. ஆண்டனியின் படத்தொகுப்பு கச்சிதமாக அமைந்திருக்கிறது. காதல் வசனங்களுக்குப் பேர் போன கெளதம் மேனன் இந்தக் குறும்படத்திலும் அதே சிரத்தையுடன் வசனங்களை எழுதி தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்திருக்கிறார்.

இரண்டே இரண்டு கதாபாத்திரங்கள் படம் முழுவதும் பேசிக்கொண்டே இருப்பதைத் தவிர படத்தில் வேறொன்றையும் எதிர்பார்க்க முடியாது, படத்தில் பேசப்படும் விஷயமும்கூட சிலருக்கு ஏமாற்றம் அளிக்கலாம். ஆனால் பணியாற்றிய யாரும் நேரில் சந்தித்துக் கொள்ளாமல் ஐபோனில் படமாக்கப்பட்ட குறும்படத்திற்கான குறுகிய எல்லைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் கெளதம் மேனன் குழுவினரின் இந்தப் புதிய முயற்சியை மனதாரப் பாராட்டலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE