'ராம்' படத்துக்கு முன் 'த்ரிஷ்யம் 2': மோகன்லால் - ஜீத்து ஜோசப் திட்டம்

By செய்திப்பிரிவு

'ராம்' படத்துக்கு முன்பாக 'த்ரிஷ்யம் 2' படத்தை உருவாக்க மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி முடிவு செய்துள்ளது.

2013-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் 'த்ரிஷ்யம்' தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து 'ராம்' என்ற படத்தில் பணிபுரிந்து வருகிறது. அந்தப் படம் வெளிநாட்டில் சுமார் 50% படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது. தற்போது கரோனா அச்சுறுத்தலால் அந்தப் பணிகளைத் தொடர முடியாத நிலையில் உள்ளது. உலக அளவில் கரோனா பிரச்சினைகள் முடிவுக்கு வந்ததும், இங்கிலாந்து மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் 'ராம்' காட்சிகளைப் படமாக்கத் திட்டமிட்டுள்ளார் ஜீத்து ஜோசப்.

இதற்கு நீண்ட நாட்களாகும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இதனால் 'ராம்' படத்துக்கு முன்னதாக மோகன்லால் - ஜீத்து ஜோசப் இணைந்து பணிபுரிய முடிவு செய்துள்ளனர். இந்தப் படம் 'த்ரிஷ்யம்' படத்தின் தொடர்ச்சியாக உருவாகவுள்ளது. அந்தப் படத்தின் கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளனர். அவர்களோடு சில புதிய கதாபாத்திரங்களும் இருக்கும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

முழுக்க கேரளாவிலேயே 'த்ரிஷ்யம் 2' படத்தின் காட்சிகளை படமாக்கி முடித்துவிடத் திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார். கேரள அரசு படப்பிடிப்புக்கான அனுமதியளித்தவுடன் 'த்ரிஷ்யம் 2' தொடங்கும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE