தானம் தரும்போது உங்கள் பெயர் எதற்கு? - ஃபர்ஹான் அக்தரைக் கேள்விகளால் துளைத்த நெட்டிசன்கள்

நடிகர் ஃபர்ஹான் அக்தரின் பெயரில் தானமாகக் கொடுக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களில் அவரது பெயர் பொறிக்கப்பட்டிருந்தது குறித்து நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கரோனா நெருக்கடி காலத்தில் எண்ணற்ற பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கும், கரோனாவை எதிர்த்துப் போராடி வரும் களப் பணியாளர்களுக்கும் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தரின் சார்பில், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் தானமாக வழங்கப்பட்டன. இதை அவரது ரசிகர்கள் முன்னெடுத்துச் செய்தனர். இதன் புகைப்படங்களை ஃபர்ஹான் அக்தர் வெளியிட்டிருந்தார். இந்த பாதுகாப்பு உபகரணங்கள் சாத்தியப்பட்டது தனது ரசிகர்களால்தான் என்றும், இதில் பங்காற்றிய அனைவருக்கும் நன்றி, களத்தில் இருக்கும் நமது மருத்துவத்துறையினரைப் பாதுகாக்க இது உதவும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அவர் பகிர்ந்திருந்த புகைப்படங்களில், ஒவ்வொரு பாதுகாப்பு உபகரணத்தின் மீதும் ஃபர்ஹான் அக்தரின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு பயனர்கள் விமர்சித்து கருத்து தெரிவித்தனர். "உங்கள் பெயர் எதற்கு கொட்டை எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. உதவி செய்பவரின் முகம் தெரியக்கூடாது இல்லையா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதில் கூறிய ஃபர்ஹான், "இது யாருடைய ஆர்டர், இதை எங்கு அனுப்ப வேண்டும் என்பது உற்பத்தியாளருக்குத் தெரிய வேண்டும் என்பதால் அப்படிப் பெயர் போடப்பட்டிருக்கிறது. வேறெதுவும் இல்லை. உங்களால் முடிந்தால் தயவுசெய்து பங்காற்றுங்கள்" என்று பதில் போட்டிருந்தார்.

ஆனால், இந்த பதிலில் திருப்தியடையாத பலர் தொடர்ந்து ஃபர்ஹானை விமர்சித்து வந்தனர். ஆனால் ஃபர்ஹானுக்கு ஆதரவாகவும் சிலர் பதிவிட்டனர். "சில நேரங்களில் நீங்கள் கொடையளிப்பது இந்த உலகத்துக்குத் தெரிவது நல்லதுதான். அதனால் மற்றவர்களும் உதவி செய்ய வேண்டும் என்று ஊக்கம் பெறுவார்கள். நல்லது செய்யும் ஒருவரை ஏன் வெறுக்க வேண்டும்" என்று ஒரு பயனர் ஆதரவுக் குரல் கொடுத்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE