சம்பளத்தைக் குறைக்கத் தயார்: டாப்ஸி

By செய்திப்பிரிவு

கரோனா தடை முடிந்து படப்பிடிப்புகளுக்குச் செல்லும்போது சம்பளத்தைக் குறைக்கத் தயார் என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. திரைத்துறையைப் பொறுத்தவரை படப்பிடிப்புகள் உட்பட அனைத்துவிதமான தயாரிப்பு வேலைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் திரைத்துறையைச் சேர்ந்த தினக்கூலிப் பணியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சில தயாரிப்பாளர்களும் நஷ்டப்பட்டு நிற்பதால் ஏற்கெனவே நடிகர்கள் சிலர் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை விட்டுக் கொடுப்பதாகவும், குறைவான சம்பளம் பெற்றுக்கொள்ளத் தயார் என்றும் அறிவித்திருந்தனர்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை டாப்ஸியிடம், சம்பளத்தைக் குறைப்பீர்களா என்று கேட்டதற்கு, "தயாராக இருக்கிறேன். படப்பிடிப்பே நடப்பதில்லை. எனவே மீண்டும் சகஜ நிலை திரும்பும்போது சம்பளம் குறையத்தான் செய்யும். அப்படி நடக்கும்போது அதை முன் தயாரிப்புடன் எதிர்கொள்வேன். அதோடு எந்த விதமான சூழலுக்கும் நான் தயார். என்னை நோக்கி எந்த மாதிரியான வாய்ப்புகள் வரும் என்று எதிர்நோக்கித் தயாராக இருக்கிறேன்" என்று பதில் கூறியுள்ளார்.

அண்மையில் பாலிவுட் தயாரிப்பாளர்கள் சிலர் நிறுத்த வைக்கப்பட்டிருக்கும் படப்பிடிப்புகள் தொடர அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE