'3 இடியட்ஸ்' படத்தில் நடிக்க இர்ஃபான் கான் பெயரைப் பரிந்துரைத்தேன்: போமன் இரானி

By செய்திப்பிரிவு

'3 இடியட்ஸ்' படத்தில் நாயகியின் தந்தையான வைரஸ் பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்க இர்ஃபானை கானைத் தான் பரிந்துரை செய்ததாக நடிகர் போமன் இரானி கூறியுள்ளார்.

கடந்த மாதம் 29 ஆம் தேதி நடிகர் இர்ஃபான் கான் காலமானார். அடுத்த நாளே பாலிவுட்டின் மூத்த நடிகர் ரிஷி கபூரும் காலமானார். இருவரின் மறைவுக்குப் பின், எண்ணற்ற பிரபலங்கள், அவர்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் நடிகர் போமன் இரானி இர்ஃபான் கான் குறித்துப் பகிர்ந்துள்ளார்.

" '3 இடியட்ஸ்' படத்தில் எனது கதாபாத்திரம் 'முன்னாபாய்' படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் போலவே இருந்தது. சற்று உற்றுப்பார்த்தால் இரண்டுமே ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் என்பது தெரியும். இருவருமே கல்லூரியின் தலைவர்கள், இருவரின் மகள்களுமே நாயகனைக் காதலிப்பார்கள், இருவருக்குமே நாயகனைக் கண்டால் பிடிக்காது. எனவே நான் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியிடம் '3 இடியட்ஸ்' படத்தில் நடிக்க மாட்டேன் என்றேன்.

எனக்குப் பதிலாக இர்ஃபான் கானை நடிக்கக் கேளுங்கள், அவர் அந்தக் கதாபாத்திரத்தில் அற்புதமாக இருப்பார் என்றேன். ஏனென்றால் இர்ஃபான் கான் அந்தக் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருப்பார். அந்த அளவுக்கு சக நடிகர் மீது அன்பும், மரியாதையும் வைத்திருந்தோம். ஆனால் ராஜ்குமார் ஹிரானி, இர்ஃபான் மிகவும் இளையவர், பொருத்தமாக இருக்காது என்றார். நான் என்ன வயதானவனா என்று கேட்டேன். பிறகு நாங்கள் சிரித்து, அந்தக் கதாபாத்திரத்தில் சிறு சிறு மாற்றங்கள் செய்தோம்.

ஆனால் இர்ஃபான் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. நான் எப்போதுமே உடன் நடிக்கும் நடிகர்களின் கேரவனுக்குச் செல்ல மாட்டேன். அது அவர்களின் அந்தரங்க நேரத்தை மீறுவது என்று நினைப்பேன். ஆனால், ஏதோ ஒரு காரணத்துக்காக நான் இர்பாஃனின் கேரவனுக்குச் செல்வேன். ஏனென்றால் தனது வாழ்க்கை முழுவதும் கடினமாக உழைத்து, சிறிய கதாபாத்திரங்களிலிருந்து சர்வதேச நட்சத்திரமாக உயர்ந்த ஒரு மனிதனுடன் நான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்" என போமன் இரானி கூறியுள்ளார்.

சமீபத்தில் 'காப்பான்' தமிழ்த் திரைப்படத்தில் ராஜன் மகாதேவ் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக போமன் இரானி நடித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE