சித் ஸ்ரீராம் பிறந்த நாள் ஸ்பெஷல்: பிரம்மாண்ட வெற்றிகளைக் குவிக்கும் குரல்

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

திரைப்படத் துறையில் தம் குரல் வளத்தாலும் உருகவைக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும் சாரீரத்தாலும் அழகான உச்சரிப்பாலும் பிரத்யேகக் குரல் குணாதிசயங்களாலும் ரசிகர்களை ஈர்த்த பல பின்னணிப் பாடகர்கள் உள்ளனர். தலைமுறைகளைக் கடந்து முன்னணிப் பாடகர்களாக நீடிப்பவர்களுக்கிடையில் போட்டி நிறைந்த களத்தில் புதிய பாடகர்கள் தனித்தன்மையால் தங்களை நிலைநிறுத்திக்கொள்கிறார்கள். இன்றைய பாடகர்களில் தனக்கென்று தனிப்பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றிருக்கும் பாடகர் சித் ஸ்ரீராம் தன் தனித்தன்மையை நிரூபித்து வெற்றி பெற்றவர்களில் ஒருவர். இன்று (மே 19) அவர் தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

கர்நாடகப் பின்னணி

சென்னையில் பிறந்தவரான சித் ஸ்ரீராம் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் கல்வி கற்றவர். இவருடைய அன்னை லதா ஸ்ரீராம் கர்நாடக இசைப் பாடகி. சகோதரி பல்லவி ஸ்ரீராம் பரதநாட்டியக் கலைஞர். தாயின் வழியில் கர்னாடக சங்கீதத்தில் நாட்டம் கொண்டார் சித் ஸ்ரீராம். அமெரிக்காவில் கர்னாடக சங்கீதம் பயின்று தேர்ச்சி பெற்றார். பாஸ்டனில் உள்ள பெர்க்லி இசைக் கல்லூரியில் பட்டம் பெற்றார். அவ்வப்போது இந்தியாவுக்கு வந்து சென்னை மார்கழி இசை விழாவில் பாடி ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

ரஹ்மானால் நிகழ்ந்த வரவு

உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இவரைத் திரைப்பட இசைக்கு அழைந்து வந்தார். மணிரத்னம் இயக்கத்தில் 2013-ல் வெளியான ‘கடல்’ படத்தில் மிக வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்ட ‘அடியே’ என்னும் பாடலே சித் ஸ்ரீராமின் முதல் திரைப்படப் பாடலாக அமைந்தது. அடுத்தாக ஷங்கர் இயக்கிய ‘ஐ’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘என்னோடு நீ இருந்தால்’ என்னும் பாடல் மிகப் பெரிய வெற்றிபெற்றது. அந்தப் பாடலின் மூலம் திரை இசை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் சித் ஸ்ரீராம்.

2016 ஆங்கிலப் புத்தாண்டு நாள் அன்று வெளியான ‘தள்ளிப் போகாதே’ பாடல் சித் ஸ்ரீராமின் புகழைப் பன்மடங்கு உயர்த்தியது. கெளதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்துக்காக ரஹ்மான் உருவாக்கியிருந்த அந்தப் பாடல் சித் ஸ்ரீராமின் முதல் பாடலைப் போலவே மிகவும் வித்தியாசமான, நுட்பங்கள் நிறைந்த இசையமைப்பைக் கொண்டது. அந்தப் பாடல் உலகம் முழுவதும் உள்ள திரை இசை ரசிகர்களை ஈர்த்தது. வெளியான சில நாட்களிலேயே யூடியூப் இணையதளத்தில் பல லட்சம் முறை கேட்கப்பட்டது. சித் ஸ்ரீராம் நட்சத்திரப் பாடகரானார்.

மீண்டும் மீண்டும் கேட்க வைத்த ‘மறுவார்த்தை’

2017 அக்டோபரில் கெளதம் மேனன் இயக்கிவந்த ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ என்னும் படத்துக்காக சித் ஸ்ரீராம் பாடிய ‘மறுவார்த்தை பேசாதே’ என்னும் பாடல் உலக லெவல் ஹிட்டடித்தது. அந்தப் பாட்டுக்கு இசையமைத்தவர் தர்புகா சிவா என்ற தகவல் பாடல் வெளியாகிப் பல மாதங்களுக்குப் பிறகுதான் அறிவிக்கப்பட்டது. அதற்குள் ‘மறுவார்த்தை பேசாதே’ பாடல் திரையிசை ரசிகர்களின் தேசிய கீதம் ஆகிவிட்டது. திரையிசைப் பாடல்களை மொபைல் ரிங்டோனாக வைப்பவர்களில் மூவரில் ஒருவர் இந்தப் பாடலை ரிங்டோனாக வைத்திருந்தார் என்று சொன்னால் மிகையாகாது.

தந்தைப் பாசத்தின் உருக்கம்

தொடர்ந்து ரஹ்மான், அனிருத் (‘நானும் ரவுடிதான்’, ‘ரம்’), லியோன் ஜேம்ஸ் (’கவலை வேண்டாம்), யுவன் ஷங்கர் ராஜா (‘பியார் பிரேமா காதல்’), டி.இமான் (’டிக் டிக் டிக்’, ‘விஸ்வாசம்’) ஆகிய முன்னனி இசையமைப்பாளர்களின் படங்களில் பாடிவந்தார் சித் ஸ்ரீராம். இவற்றில் பெரும்பாலானவை வெற்றிபெற்றன, ‘விஸ்வாசம்’ படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய ‘கண்ணான கண்ணே’ என்னும் பாடல் பெற்றோரையும் குழந்தைகளையும் ஒருசேரக் கவர்ந்தது. பல ஆண்டுகளாக மகளைப் பிரிந்திருந்த ஏக்கத்தையும் பாசத்தையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் இளைஞரான சித் ஸ்ரீராம். அதுவே அந்தப் பாடலின் பிரம்மாண்ட வெற்றிக்குக் காரணமானது. இதேபோல் ‘டிக் டிக் டிக்’ படத்தில் தந்தை-மகன் பாசத்தை வெளிப்படுத்தும் ‘குறும்பா’ பாடலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

தமிழர்களையும் கவர்ந்த தெலுங்குப் பாடல்

சித் ஸ்ரீராம் தமிழில் பாடிய பெரும்பாலான வெற்றிப் பாடல்களின் தெலுங்குப் பதிப்பையும் அவரே பாடினார். ‘தள்ளிப் போகாதே’ – ‘வெள்ளிப் போமாகே’ ஆனது. ‘அடியே’- ‘யாடிகே’ ஆனது. ‘என்னோடு நீ இருந்தால்’ – ‘நுவ்வண்டே நா ஜதகா’ ஆனது. இவற்றைத் தவிர நேரடித் தெலுங்குப் படங்களிலும் பாடத் தொடங்கினார் சித் ஸ்ரீராம். அவற்றில் ‘கீத கோவிந்தம்’ படத்தில் இடம்பெற்ற ‘இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே’ என்ற பாடல் தெலுங்கில் மட்டுமல்ல தமிழிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. பல இளம் காதல் ஜோடிகளின் ரிங்டோன் ஆனது.

இளையராஜாவைக் கவர்ந்தவர்

மிஷ்கின் இயக்கி இந்த ஆண்டு வெளியான ‘சைக்கோ’ திரைப்படத்தில் இளையராஜா இசையில் இரண்டு பாடல்களையும் சித் ஸ்ரீராம்தான் பாடினார். அவை இரண்டுமே மிகப் பெரிய வெற்றிபெற்றுவிட்டன. குறிப்பாக ‘உன்ன நெனச்சு’ பாடல் ரசிகர்களை மனமுருக வைத்தது. அடுத்ததாக அவர் இசையமைத்துள்ள ‘தமிழரசன்’ படத்திலும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.யேசுதாஸ் ஆகியோரைத் தவிர சித் ஸ்ரீராமும் ஒரு பாடலைப் பாடியுள்ளார். இசை, குரல் வளம், தமிழ் உச்சரிப்பு ஆகியவை தொடர்பாக கறாரான அணுகுமுறையைக் கொண்ட இசைஞானியை வெகு சீக்கிரத்தில் கவர்ந்துவிட்டார் சித் ஸ்ரீராம்.

முன்னணிப் பாடகராக விளங்கிவரும் நேரத்தில் இசையமைப்பாளராகவும் தடம் பதித்துவிட்டார் சித் ஸ்ரீராம். மணிரத்னம் கதை எழுதி தயாரித்து தனா இயக்கிய ‘வானம் கொட்டட்டும்’ படத்துக்கு இசையமைத்திருந்தார் சித் ஸ்ரீராம். அந்தப் படத்தின் பாடல்கள் வித்தியாசமான மென் சாரலாக ரசிகர்களைக் கவர்ந்தன.

மிக இளம் வயதில் இசைத் துறையில் பல சாதனைகளை நிகழ்த்தி தனித்துவமான இடத்தையும் லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருக்கும் பாடகர் சித் ஸ்ரீராம் இன்று போல் என்றும் அழியாப் புகழுடன் நீடூழி வாழ மனமார வாழ்த்துவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE