'குஷி' பாடல்கள் உருவான விதம்: இசையமைப்பாளர் தேவா பகிர்வு

By செய்திப்பிரிவு

'குஷி' படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனதையொட்டி, அந்தப் படத்தின் பாடல்கள் உருவான விதம் குறித்து இசையமைப்பாளர் தேவா பகிர்ந்துள்ளார்.

2000-ம் ஆண்டு மே 19-ம் தேதி வெளியான படம் 'குஷி'. எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் விஜய், ஜோதிகா, விஜயகுமார், மும்தாஜ், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராகவும், தேவா இசையமைப்பாளராகவும் பணிபுரிந்தனர்.

இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், இந்தப் படத்தின் பாடல்களும் அமோக வரவேற்பைப் பெற்றன. இன்றுடன் இந்தப் படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. இதனை முன்னிட்டு 'குஷி' பாடல்கள் உருவான பின்னணி குறித்து இசையமைப்பாளர் தேவா பேட்டியளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் தேவா கூறியிருப்பதாவது:

" 'குஷி' திரைப்படத்தை என் திரை வாழ்க்கையின் மைல்கல் என்பேன். கானா இசையமைப்பாளர் என்ற பிம்பத்தை உடைக்க அந்தப் படம் உதவியது. அற்புதமான கூட்டு முயற்சியால் அந்தப் படத்தில் சிறந்த மெட்டுகள் அமைந்தன.

எஸ்.ஜே.சூர்யா கதை சொல்லும் விதமே அட்டகாசமாக இருக்கும். அவர் காட்சியை விவரிக்கும்போது நானே திரையரங்கில் இருந்து அதைப் பார்ப்பது போல இருக்கும். அவரோட கம்போஸிங் உட்காரும்போது அங்கு மகிழ்ச்சியும், சிரிப்பும் நிறைந்திருக்கும். சிரமமே தெரியாது.

மேகம் கருக்குது பாடலுக்கான சூழலாக, ஒரு பெண், படிப்பு முடிந்து அவளது கிராமத்துக்குத் திரும்புகிறாள். பசுமை, மழையைப் பார்த்து உற்சாகமாகிறாள் என்று சொன்னார். அதற்கு நான் ஒரு சாதரணமான மெட்டைத்தான் கொடுத்தேன். எனக்கு அது மிகச் சாதாரணமாக இருந்தது. இன்னும் சிறப்பாக மெட்டமைக்கலாமே என்று நினைத்தேன்.

ஆனால், எஸ்ஜே சூர்யாவுக்கு அந்த மெட்டு பிடித்தது. 'வாலி' படத்தில் ஏற்கெனவே நாங்கள் பணியாற்றியிருந்ததால் அவரது உள்ளுணர்வை நம்பி அந்தப் பாடலை அப்படியே வைத்தோம். ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. அவருக்கு ரசிகர்களின் நாடி தெரியும். இன்று கூட நான் ஒரு பாடலுக்கு மெட்டமைக்கும்போது எஸ்ஜே சூர்யாவை அழைக்கலாமா என்று நினைப்பேன். ஏனென்றால் அவர் நன்றாக இருக்கிறது என்று நினைக்கும் பாடல் ரசிகர்களிடம் போய்ச் சேரும்.

கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடலில் எஸ்ஜே சூர்யாவும் சில சப்தங்களைக் கொடுத்திருந்தார். குஷி பாடல்களின் வெற்றிக்கு பாடகர்கள் ஹரிஹரன், சங்கர் மஹாதேவன், ஹரிணி, அனுராதா ஸ்ரீராம், பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோரும் முக்கியக் காரணம்.

மொட்டு ஒன்று, ஓ வெண்ணிலா பாடல்களில் முறையே மைக்கேல் ஜாக்சன் மற்றும் ஒரு போர்த்துகீசிய பாடலின் தாக்கம் இருக்கும். எந்த இசையமைப்பாளருக்குமே இன்னொருவர் போட்ட மெட்டை அப்படியே போடுவதில் உடன்பாடு இருக்காது. அதற்குப் பதில் புதிதாக ஒரு மெட்டை உருவாக்கத்தான் விரும்புவார்கள். ஆனால், சில நேரங்களில் இயக்குநர்கள் அவர்களுக்குப் பிடித்த பாடல்கள், தாக்கங்களைப் பற்றிச் சொல்வார்கள்".

இவ்வாறு தேவா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE