நடிகர் பசுபதி பிறந்த நாள் ஸ்பெஷல்: எல்லைகளுக்குள் சிக்காத அசல் கலைஞன்

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை எனப் பல வகையான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்களின் பெரும் மதிப்பைப் பெற்றிருப்பவரான பசுபதி மே 18 அன்று தன் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்

முத்துசாமியின் மாணவர்

கமல்ஹாசனின் ’விருமாண்டி’ படத்தின் வில்லன் கொத்தாள தேவனாக நடித்ததன் மூலம் பசுபதி தீவிரமாக கவனிக்கப்படத் தொடங்கினார். அந்தப் படத்தில் ஒரு அசல் மதுரை மாவட்ட நபராகவே வாழ்ந்திருப்பார். அவர் மையக் கதாபாத்திரத்தில் நடித்த ‘வெய்யில்’ கடந்த ஆண்டு வெளியான ‘அசுரன்’ போன்ற படங்களில் தெக்கத்தி மனிதர்களைக் கண்முன் நிறுத்தியிருப்பார். இவற்றின் விளைவாக, பசுபதி தென் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதே பலரின் மனப் பதிவாக இருக்கும். ஆனால் உண்மையில் பசுபதி சென்னையை அடுத்துள்ள பொழிச்சலூர் என்னும் புறநகர்ப் பகுதியில் 1969-ல் பிறந்தவர். 1980-களில் சென்னையில் தீவிரமாக இயங்கி வந்த நாடக் குழுவான கூத்துப்பட்டறையில் இணைந்தார்.

எந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் அதை வெகு சிறப்பாக உள்வாங்கி கச்சிதமாக வெளிப்படுத்துவதுதான் பசுபதியின் சிறப்பு. கிராமத்து எளியவர், சிறு நகரத்து மனிதர், பெருநகர பிரபலம், ரவுடி, தாதா, ஆசிரியர், மருத்துவர் என எப்படிப்பட்ட கதாபாத்திரத்தின் பின்னணி, சூழல், மண் சார்ந்த பழக்கவழக்கங்கள், உடல்மொழி என அனைத்தையும் சிறப்பாக பிரதிபலிப்பவர் பசுபதி. அந்த வகையில் கூத்துப்பட்டறை நிறுவனரான எழுத்தாளரும் மாபெரும் நாடக ஆளுமையுமான ந.முத்துசாமியின் பெருமைக்குரிய சீடர்.

மாற்றத்துக்கு வித்திட்ட நட்பு

கூத்துப்பட்டறையில் அங்கம் வகித்த நடிகர் நாசர் மூலமாக பசுபதிக்கு கமல்ஹாசனின் அறிமுகம் கிடைத்தது. கமலின் பிரம்மாண்டக் கனவுப் படைப்பான ‘மருதநாயகம்’ படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கத் தொடங்கினார் பசுபதி. ஆனால் அந்தப் படம் நின்றுபோனது. நாசர் இயக்கி நடித்த ‘மாயன்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார் பசுபதி. ‘ஹவுஸ்புல்’, ‘தூள்’, ’இயற்கை’, ‘அருள்’ என பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் 2004-ல் கமல் தயாரித்து இயக்கி நடித்த ‘விருமாண்டி’ படம்தான் பசுபதியின் திரை வாழ்வில் முக்கியத் திருப்பமாக அமைந்தது.

நட்சத்திரமல்ல நடிகன்

அதன் பிறகு தொடர்ந்து 'சுள்ளான்', 'மதுர', 'திருப்பாச்சி' ஆகிய படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து வந்தவர் கமலின் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்தில் நகைச்சுவை கலந்த வில்லனாக நடித்தார். ‘மஜா’ படத்தில் நாயகன் விக்ரமுக்கு இணையான வேடத்தில் வடிவேலுக்குப் போட்டியாக நகைச்சுவையில் பட்டையைக் கிளப்பினார். விருதுநகர் மக்களின் அனல் நிறைந்த வாழ்க்கையின் அசல் பதிவாக அமைந்த இயக்குநர் வசந்தபாலனின் ‘வெயில்’ படத்தில் மையக் கதாபாத்திரத்தில் நடித்து விமர்சகர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டார். எஸ்.பி.ஜனநாதனின் ‘ஈ’ படத்தில் நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதையும் தமிழக அரசின் விருதையும் பெற்றார்.

பொதுவாக கதாநாயகனாக நடித்து முதல் படம் வெற்றிபெற்றுவிட்டால் பலரும் தொடர்ந்து நாயக வேடத்திலேயே நடிக்க விரும்புவார்கள். ஆனால் ’வெயில்’ படத்துக்குப் பிறகு அதேபோல் நாயகனாக நடிப்பதற்குத் தேடி வந்த வாய்ப்புகளை மறுத்தார். நட்சத்திரமாக இருப்பதைவிட நடிகராக இருப்பதே மனதுக்கு நெருக்கமானது என்று பலர் கூறினாலும் அந்தக் கூற்றை உண்மையாகப் பின்பற்றும் மிகச் சிலரில் ஒருவர் பசுபதி.

பொதுவாக கதாநாயகனாக நடித்து முதல் படம் வெற்றிபெற்றுவிட்டால் பலரும் தொடர்ந்து நாயக வேடத்திலேயே நடிக்க விரும்புவார்கள். ஆனால் ’வெய்யில்’ படத்துக்குப் பிறகு அதேபோல் நாயகனாக நடிப்பதற்குத் தேடி வந்த வாய்ப்புகளை மறுத்தார். நட்சத்திரமாக இருப்பதைவிட நடிகராக இருப்பதே மனதுக்கு நெருக்கமானது என்று பலர் கூறினாலும் அந்தக் கூற்றை உண்மையாக பின்பற்றும் மிகச் சிலரில் ஒருவர் பசுபதி.

ரஜினி படத்தில் நாயகன்

2008-ல் வெளியான ‘குசேலன்’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்தார். ’கத பறயும்போள்’ என்ற ,மலையாளப் படத்தின் மறு ஆக்கமான இந்தப் படத்தில் பசுபதிதான் மையக் கதாபாத்திரம். சற்று விரிவான கெளரவ வேடத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இந்தப் படத்தில் தலைப்புக்கேற்ப ஏழையாக இருந்தாலும் சுயமரியாதையுடன் வாழும் சிகைதிருத்தக் கலைஞராக வெகு சிறப்பாக நடித்திருந்தார் பசுபதி.

2011-ல் வெளியான ’அரவான்’ படத்தின் மூலம் மீண்டும் இயக்குநர் வசந்த பாலனுடன் இணைந்தார். சாகித்ய அகாடமி விருதுபெற்ற சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில் 18ஆம் நூற்றாண்டு மதுரை வட்டாரத்தில் வாழ்ந்த பழங்குடித் தலைவனாக நடித்திருந்தார். இன்றுவரை தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை, மையக் கதாபாத்திரம் என மாறி மாறி நடித்து ரசிகர்கள், விமர்சகர்கள் மனங்களில் மரியாதைக்குரிய இடத்தில் இருக்கிறார்.

அதேபோல் சினிமா என்பது நாடகத்திலிருந்து முகிழ்ந்த கலை வடிவம் என்றாலும் மேடையிலிருந்து திரைக்கு வரும் பலர் மேடையை மறந்துவிடுவார்கள். ஆனால் பசுபதி மேடை நாடகங்களிலும் நடித்துவருகிறார். நாடக மேடை மீதான நன்றியுணர்வை மறக்காமல் இருக்கிறார். பசுபதியை நிறைய திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லை என்பது நடிகர்களின் ஏக்கமாக இருக்கிறது. ஆனால் அவரோ தன் மனதுக்கு பிடித்த நல்ல வேடங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இதை 2016இல் வழங்கிய ஒரு பேட்டியில் அவரே கூறியிருக்கிறார்.

சிறந்த நடிகரான பசுபதிக்கு அவர் விரும்பும் கதாபாத்திரங்கள் அமைய வேண்டும் திரைப்படத் துறையில் அவர் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

42 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்