திரைத்துறையில் நிகழப்போகும் மாற்றம்: 'பாகுபலி' தயாரிப்பாளர் கணிப்பு

By செய்திப்பிரிவு

திரைத்துறையில் நிகழப்போகும் மாற்றங்களைக் கணித்து சில தகவல்களை 'பாகுபலி' தயாரிப்பாளர் ஷோபு வெளியிட்டுள்ளார்.

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. இரண்டு பாகங்களாக வெளியான இந்தப் படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றன.

இந்தப் படங்களின் தயாரிப்பாளரான ஷோபு, தற்போதுள்ள கரோனா நெருக்கடியால் உருவாகியுள்ள சூழல் குறித்து தனது ட்விட்டர் பதிவில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் வரும் காலத்தில் படத்தின் விளம்பரங்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் ஷோபு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"திரைப்படத்துறைகளின் அதிலும் குறிப்பாக தெலுங்கு திரைத்துறையின் மார்கெட்டிங் இந்த கரோனா காலத்துக்குப் பிறகு எப்படி மாறப்போகிறது என்று யோசிக்கிறேன். வெளியீட்டுக்கு முன்பான நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா, தியேட்டர், மால் நிகழ்ச்சிகள், சாலை பயணங்கள் உள்ளிட்டவை இனி நடத்தப்படாது.

டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் ஆன்லைன் கலந்துரையாடல் ஆகியவற்றை நோக்கி மிகப்பெரிய மாற்றம் நிகழும். சினிமாவை பற்றி தெரிந்தவராக இருக்கவேண்டும். இனி ஒரே சைஸ் எல்லாவற்றுக்கும் பொருந்தாது. இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ரசிகர்களை உற்சாகப்படுத்தி அவர்களை தியேட்டர்களுக்கு அழைத்து வர மார்கெட்டிங் மிக முக்கிய பங்கு வகிக்கப் போகிறது"

இவ்வாறு ஷோபு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE