தொடர் நலம் விசாரிப்புகள்: நடந்தது என்ன? - ராதாரவி வீடியோவில் விளக்கம்

By செய்திப்பிரிவு

திரையுலகினர் பலரின் நலம் விசாரிப்புகளால், கோத்தகிரியிலிருந்து ராதாரவி வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு கரோனா ஊரடங்கினால் சிக்கிக் கொண்டவர்கள், இ-பாஸ் விண்ணப்பித்து சொந்த ஊருக்குத் திரும்பலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இதில் விண்ணப்பித்து பலரும் சொந்த ஊருக்கத் திரும்பினார்கள்.

சில பிரபலங்கள் கூட தங்களுடைய பணிகளுக்காக சென்னையிலிருந்து அவர்களுடைய சொந்த ஊருக்குச் சென்றார்கள். அதில் பாரதிராஜாவைத் தொடர்ந்து நேற்று (மே 13) ராதாரவி வதந்தியில் சிக்கினார். கோத்தகிரியில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுக்கலாம் என்று குடும்பத்துடன் இ-பாஸ் வாங்கிப் பயணித்துள்ளார். சென்னையிலிருந்து வந்திருப்பதால் கோத்தகிரியில் ராதாரவி குடும்பத்தினர் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதனால் ராதாரவிக்கு கரோனா தொற்று, அவர் தனிமைப்படுத்தப்பட்டார் என்று பலரும் செய்திகளைப் பரப்பினார்கள். இதற்கு விளக்கமும் அளித்தார். ஆனால் தொடர்ச்சியாக திரையுலகினர் பலரும் நலம் விசாரித்துக் கொண்டே இருந்ததால், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ராதாரவி.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"என்னைப் பற்றி தவறான செய்தி ஒன்று வெளியானதால் பலரும் தொலைபேசியிலும், மெசேஜிலும் நலம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் நன்றாக இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். தனிமைப்படுத்தப்பட்டார் என்கிறார்கள். அனைவரையுமே தனிமைப்படுத்திதான் ஆக வேண்டும். வேறு மாவட்டத்துக்கு இந்த மாவட்டத்துக்கு வந்தால் தனிமைப்படுத்துவார்கள். அதில் ஒன்றுமே தவறில்லை.

கார் பாஸ் கொடுக்கும் போதே, 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே வரமுடியும். இங்கு வீடு இருப்பதால் இங்கு வந்து தங்கியிருக்கிறேன். 14 நாட்கள் வீட்டிற்குள்தான் இருப்பேன். மாநகராட்சியிலிருந்து நோட்டீஸ் ஒட்டுவார்கள். ஒட்டட்டும் அதில் தவறில்லை. கோத்தகிரியில் உள்ள அரசாங்க ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இங்கு எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. அனைவருக்கும் தெரிந்த முகம் என்பதால் பெரிய செய்தியாகிவிட்டது. அரசாங்கம் எப்போது படப்பிடிப்பு தொடங்கலாம் என்று சொல்கிறதோ, அப்போது சென்னைக்கு மீண்டும் வந்து படப்பிடிப்பில் கலந்துகொள்வேன். என்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி"

இவ்வாறு ராதாரவி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE