நள்ளிரவுப் பயணம்; மொழி தெரியாமல் நடை: வெனிஸ் நகரில் 'திகில்' அனுபவம் குறித்து ராஷ்மிகா பகிர்வு

By செய்திப்பிரிவு

வெனிஸ் நகரில் தான் தனியாக மாட்டிக்கொண்டு நள்ளிரவில் பயணம் மேற்கொண்டதைப் பற்றி நடிகை ராஷ்மிகா மந்தனா பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் ராஷ்மிகா தெலுங்கில் நடித்து வெளியான படம் 'பீஷ்மா'. இதன் பாடல் படப்பிடிப்பு வெனிஸைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்துள்ளது. ரோம் நகரத்திலிருந்து வெனிஸுக்குச் செல்ல விமானமும், ஃப்ளாரன்ஸ் என்ற ஊர் வழியாக ரயிலும் பயணம் செய்ய இருந்தது. ஊரைச் சுற்றிப் பார்க்க தனியாக ரயிலில் பயணிப்பதைத் தேர்ந்தெடுத்துள்ளார் ராஷ்மிகா.

"எனது நிறுத்தம் வர நண்பகல் ஆகும் என்று எனக்குத் தெரியும். அதில் ஒரு நிறுத்தம் 11.45க்கு வரும் என்றும், அடுத்தது 12.15க்கு வரும் என்று இருந்தது. சரி 11.45 நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாம் என்று நினைத்து தவறான நிறுத்தத்தில் இறங்கிவிட்டேன்.

அங்கிருந்து எனக்கு இரண்டே வழிகள்தான். கையில் இருக்கும் பெட்டியோடு வெனிஸ் நகருக்கு இரண்டரை மணி நேரம் தனியாக நடந்தே செல்வது, அல்லது ஒரு கட்டம் வரைக்கும் டாக்ஸி எடுத்துக் கொண்டு அங்கிருந்து படகை எடுத்துச் செல்வது.

சரி என்று நான் டாக்ஸியை எடுத்துச் சென்றேன். ஆனால் என் விதி, அந்த நேரத்தில் ஆங்கிலம் தெரிந்த எந்தப் படகு ஓட்டுநரும் எனக்குக் கிடைக்கவில்லை. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உலகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் இங்கு சுற்றுலா வருகின்றனர். ஆனால் ஆங்கிலம் தெரியவில்லையா என்று. ஒருவேளை அன்று எனக்கு அதிர்ஷ்டம் இல்லை போல. எங்கு செல்ல வேண்டும், எப்படிச் செல்ல வேண்டும் என்று நான் கேட்டதும் எதுவும் யாருக்கும் புரியவில்லை.

சரி என்று நானே வழி தேடி நடக்க ஆரம்பித்தேன். என் வாழ்க்கையிலேயே நான் அவ்வளவு நடந்ததில்லை. என் பெட்டியை இழுத்துக் கொண்டு வீடுகள் இருக்கும் பகுதியில் நள்ளிரவில் நடந்து கொண்டிருந்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு ஆள் கூட தென்படவில்லை. எனது மொபைலின் பேட்டரியும் தீர்ந்து கொண்டிருந்தது. என்னிடம் மேப்பும் இல்லை.

சரி இனி வாழ்க்கை முழுவதும் இங்குதான் என்றால் என்ன செய்வது என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தேன். ஏனென்றால் நான் அவ்வளவு பயந்திருந்தேன். அப்படி நடந்து நடந்து நள்ளிரவு 2 மணிக்கு நான் தங்க வேண்டிய ஹோட்டலுக்கு வந்தேன். ஆனால் இந்த மொழித் தடையைத் தாண்ட வேண்டும் என்று இந்த அனுபவம் என்னைத் தீர்மானமெடுக்க வைத்தது.

சோர்வாக இருந்ததால் அடுத்த நாள் முழுவதும் ஹோட்டலில் இருந்தேன். அதற்கடுத்த இரண்டு நாட்களும் நான் வெளியே சென்று, படகில் வெனிஸ் நகரம் முழுவதையும் சுற்றிப் பார்த்து எங்கிருந்து எப்படிச் செல்வது, எதற்கு என்ன வழி என்று தெரிந்து கொண்டேன். உள்ளூர் மக்களிடம் உரையாடி, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். வெனிஸில் தொலைந்து போயிருக்கிறேன் ஆனால், இப்போது அங்கிருக்கும் ஒவ்வொரு இடமும் எனக்குத் தெரியும்" என்று புன்னகைக்கிறார் ராஷ்மிகா.

ப்ரதீப் குமார், தி இந்து (ஆங்கிலம்), தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE