டிஜிட்டல் வெளியீட்டில் புதிய மைல்கல்: 'குலாபோ சிதாபோ’ அமேசான் ப்ரைமில் வெளியாகிறது

By செய்திப்பிரிவு

அமிதாப் பச்சன், ஆயுஷ்மன் குரானா நடிப்பில் உருவாகியுள்ள 'குலாபோ சிதாபோ' திரைப்படம் டிஜிட்டலில் வெளியாவது உறுதியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களாக பாலிவுட்டில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வந்த விஷயம் உண்மையாகியுள்ளது. அமிதாப் பச்சன், ஆயுஷ்மன் குரானா நடிப்பில் 'பிங்க்' இயக்குநர் ஷூஜித் சிர்கார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குலாபோ சிதாபோ' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஸ்ட்ரீமிங் சேவையில் ஜூன் 12 அன்று நேரடியாக வெளியாகிறது.

இந்தப் படம் பற்றி பேசியுள்ள அமிதாப், "என் கதாபாத்திரத் தோற்றத்தை ஷூஜித் காட்டியவுடனேயே எனக்கு ஆர்வம் வந்துவிட்டது. தினமும் என் ஒப்பனைக்கே 3 மணி நேரம் ஆகும். படத்தில் ஆயுஷ்மனும் நானும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டே இருந்தாலும் முதல் முறையாக அவருடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. இது ஒரு குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படம். எல்லைகள் தாண்டி அனைவரையும் சேரும். இதை சர்வதேச ரசிகர்களுக்குக் கொண்டு செல்வதில் மகிழ்ச்சி" என்று கூறியுள்ளார்.

ஆயுஷ்மன் குரானா பேசுகையில், " விக்கி டோனர்' படத்துக்குப் பிறகு ஷூஜித்துடன் இணைந்திருக்கிறேன். இன்று என் நிலைக்குக் காரணமே அவர்தான். அவரது படத்தில் மீண்டும் நடிதத்தில் மகிழ்ச்சி. அமிதாப் பச்சனுடன் முதல் முறையாக நடித்துள்ளேன். பல வருடங்களாக அவருடன் நடிக்க வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளது. ஷூஜித் அதைச் சாத்தியப்படுத்தியுள்ளார். அவருக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன். ஒரு சகாப்தத்துடன் பணியாற்றியது எனக்குப் பெருமை. ஒரு நடிகராக நான் நிறைய கற்றிருப்பதாக உணர்கிறேன். இது மிக எளிமையான, நகைச்சுவைத் திரைப்படம். ஒரு வீட்டின் உரிமையாளருக்கும், வாடகைக்குக் குடியிருப்பவருக்கும் இடையே நடக்கும் மோதல்" என்று கூறியுள்ளார்.

இந்தியப் பொழுதுபோக்குத் துறையில் இது ஒரு புதிய சகாப்தம் என்று கூறியுள்ள இயக்குநர் ஷூஜித் சிர்கார் ஒரு படத்தை எடுத்து முடித்தவுடனே அதை வெளியிட்டுவிடும் கெட்ட பழக்கம் தனக்கு இருப்பதாகக் கூறியுள்ளார். ஏப்ரல் வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம் ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. ஏற்கெனவே தனது ஒரு படம் இப்படி தாமதமாகி, வெளியாகாமல் போனதால், டிஜிட்டலில் இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார் சிர்கார். ஜூன் 12 அன்று 200 நாடுகளில் அமேசான் ப்ரைம் தளத்தில் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

இந்திய அளவில் டிஜிட்டல் வெளியீட்டில் இது ஒரு மைல்கல் என்றே கூறலாம். முதன்முறையாக இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ஒரு திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் இந்தியத் திரையுலகில் ஒரு மாற்றம் நிகழலாம் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE