ஊரடங்கு எதிரொலி: பெரிய பட்ஜெட் பாலிவுட் படங்கள் ஸ்ட்ரீமிங்கில் வெளியீடா?

ஊரடங்கு காரணமாக அமிதாப் பச்சன், அக்‌ஷய்குமார், வித்யா பாலன் உள்ளிட்ட பிரபல பாலிவுட் நட்சத்திரங்களின் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் நேரடியாக டிஜிட்டல் வெளியீடாக ஸ்ட்ரீமிங் சேவை தளங்களில் வெளியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு நிலவுகிறது. ஊரடங்குக்குப் பின் திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் கூடும் பொது இடங்கள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலையில் நாட்களைக் கடத்த வேண்டாம் என ஒரு சில பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை டிஜிட்டலில் வெளியிடுவது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

'பிகு', 'பிங்க்', 'அக்டோபர்' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஷூஜித் சிர்கார், அமிதாப் பச்சன் ஆயுஷ்மன் குரானாவை வைத்து 'குலாபோ சிதாபோ' என்ற படத்தை இயக்கியுள்ளார். வித்யாபாலன் நடிப்பில் கணித மேதை 'சகுந்தலா தேவி'யின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகியுள்ளது. 'செஹ்ரே' என்ற இன்னொரு அமிதாப் படமும் உள்ளது. இந்தப் படங்கள் அனைத்துமே ஸ்ட்ரீமிங் சேவையில் வெளியாகும் என்று தெரிகிறது. ஏற்கனவே நவாசுதின் சித்திகி நடிப்பில் உருவாகியிருக்கும் 'கூம்கேது' திரைப்படம், மே 22 அன்று, ஜீ 5 ஸ்ட்ரீமிங் சேவையில் வெளியாவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'குலாபோ சிதாபோ', 'சகுந்தலா தேவி' இரண்டு படங்களும் அமேசான் ப்ரைமில் வெளியாவது உறுதியாகியுள்ளது என்றும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வாரம் வெளியாகும் என்றும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது பற்றிக் கேட்கத் தொடர்பு கொண்ட போது இரண்டு தயாரிப்பு தரப்புக்ளுமே பதில் சொல்லவில்லை.

'செஹ்ரே' படத்தின் தயாரிப்பாளர் ஆனந்த் பண்டிட் பேசுகையில், "ஊரடங்கு எப்படி நீள்கிறது என்பதைப் பார்க்கும் போது செஹ்ரே படத்தை டிஜிட்டலில் வெளியிடுவது குறித்து யோசிக்கிறோம். ஜூன் முதல் வாரம் தான் முடிவெடுக்கப்படும்" என்றார்.

டிஜிட்டல் வெளியீடு குறித்து பெரும்பாலான தயாரிப்பாளர்கள் ஒன்று ரகசியமாகவோ அல்லது முடிவெடுக்கவில்லை என்றோ கூறினாலும் 2020-ம் ஆண்டு இன்னும் நிறைய பாலிவுட் படங்கள் டிஜிட்டலில் வெளியாகவுள்ளது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

தொடர்ந்து 100 கோடி வசூல், 200 கோடி வசூல், 300 கோடி வசூல் என பாக்ஸ் ஆபிஸில் வேட்டையாடி வரும் அக்‌ஷய் குமார், 'காஞ்சானா' படத்தின் இந்தி ரீமேக்கான 'லக்‌ஷ்மி பாம்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் மே 22 வெளியாகவிருந்தது. ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிப்பதால் அதன் ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் படம் நேரடியாக வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது பற்றி தயாரிப்பு தரப்பு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

மேலும் வருண் தவன் நடிப்பில் 'கூலி நம்பர் 1', அபிஷேக் பச்சன் நடிக்கும் 'ஜுந்த்', ஜான்வி கபூரின் 'குஞ்ஜன் சக்ஸேனா', கியாரா அத்வானியின் 'இந்தூ கி ஜவானி' உள்ளிட்ட படங்களும் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'இந்தூ கி ஜவானி' படத்தின் இணை தயாரிப்பாளர் நிகில் அத்வானி, இதுவரை எதுவும் உறுதியாகவில்லை என்றும். உறுதி ஆன பிறகு அறிவிப்போம் என்றும் கூறியுள்ளார். 'கூலி நம்பர் 1' தயாரிப்பாளரும் இதையே கூறியுள்ளார். இன்னொரு பக்கம் ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம், அதன் இரண்டு பிரம்மாண்ட தயாரிப்புகளான '83' மற்றும் 'சூர்யவன்ஷி' படங்களைத் திரையரங்கில் வெளியிட காத்திருக்கத் தயார் என்றும், இன்னும் 6-லிருந்து 9 மாதங்கள் வரை பார்த்துவிட்டு, அதன் பின் நிலைமை எப்படி என்று பார்த்துக் கொள்ளவிருப்பதாகக் கூறியுள்ளது.

திரையரங்குகள் திறக்கும் வரை காத்திருங்கள், எந்தப் படத்தையும் ஸ்ட்ரீமிங்கில் வெளியிட வேண்டாம் என்று சில வாரங்களுக்கு முன்பு தான், மல்டிப்ளெக்ஸ் சங்கம், பாலிவுட் கலைஞர்களுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலை பற்றிப் பேசிய பாலிவுட் வர்த்தக நிபுணர் தரன் ஆதர்ஷ், "இதில் நிறைய பணம் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஓடிடியில் வெளியான படத்தை திரையரங்கில் வெளியிட முடியாது. ஆனால் திரையரங்கில் வெளியான படம் பின்னாட்களில் டிஜிட்டலாக வெளியாகும். டிஜிட்டல் வெளியீடால் திரைப்படங்களுக்கு நஷ்டமா லாபமா என்பது பற்றிச் சொல்வது கடினம். ஏனென்றால் ஒரு நல்ல படத்தை திரையரங்கில் வெளியிடும் போது அதன் வெற்றிக்கு வானமே எல்லை" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE