கோத்தகிரியில் தனிமைப்படுத்தப்பட்டேனா? - ராதாரவி விளக்கம்

By செய்திப்பிரிவு

கோத்தகிரியில் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திக்கு ராதாரவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ஊரடங்கினால் சிக்கிக் கொண்டவர்கள், இ-பாஸ் விண்ணப்பித்து சொந்த ஊருக்குத் திரும்பலாம் என்று தமிழக அரசு ஏற்பாடு செய்தது. இதன் மூலம் பலரும் சொந்த ஊருக்குத் திரும்பினார்கள்.

சில பிரபலங்கள் கூட தங்களுடைய பணிகளுக்காக சென்னையிலிருந்து அவர்களுடைய சொந்த ஊருக்குச் சென்றார்கள். சமீபத்தில் பாரதிராஜா தேனிக்குச் சென்றது பெரும் சர்ச்சையாக உருவானது. அதற்கு அவர் விளக்கமும் அளித்தார்.

தற்போது அதே போன்றதொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் ராதாரவி. என்னவென்றால், கோடைக் காலமாக இருப்பதால் கோத்தகிரியில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுக்கலாம் என்று குடும்பத்துடன் இ-பாஸ் வாங்கிப் பயணித்துள்ளார். சென்னையிலிருந்து வந்திருப்பதால் கோத்தகிரியில் ராதாரவி குடும்பத்தினர் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதனால் ராதாரவிக்கு கரோனா தொற்று, அவர் தனிமைப்படுத்தப்பட்டார் என்று பலரும் செய்திகளைப் பரப்பினார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் வழக்கமான கரோனா பரிசோதனை ராதாரவிக்கு செய்யப்பட்டுள்ளது. இன்னும் அதன் விவரம் கூட வெளியாகவில்லை. அதற்கு இவ்வாறு வதந்திகளைப் பரப்பியுள்ளனர்.

இது தொடர்பாக ராதாரவியிடம் கேட்ட போது, "நான் ஒய்வெடுக்கலாம் என்று வந்தேன். ஓய்வு என்பது தனிமைதானே. ஆகையால் கோத்தகிரியில் ஓய்வெடுத்து வருகிறேன். தேவையில்லாமல் வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE