கரோனா நெருக்கடியால் கஷ்டப்படும் 'ஆட்டோகிராஃப்' கோமகன் குழுவினர்: நன்மைகள் நடக்கும் என நம்பிக்கை

By செய்திப்பிரிவு

கரோனா நெருக்கடியால் 'ஆட்டோகிராஃப்' கோமகன் குழுவினர் கஷ்டப்பட்டு வருகின்றனர். நன்மைகள் நடக்கும் என கோமகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2004-ம் ஆண்டு சேரன் இயக்கி, நடித்து, தயாரித்து வெளியான படம் 'ஆட்டோகிராஃப்'. இதில் கோபிகா, சினேகா, மல்லிகா, ராஜேஷ், இளவரசு உள்ளிட்ட பலர் சேரனுடன் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போதும் இப்படம் காதலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் பாடல் காட்சியில் இடம்பெற்றது கோமகன் இசைக்குழு. முழுக்கப் பார்வையற்றவர்களால் தொடங்கப்பட்ட இந்த இசைக்குழு, 'ஆட்டோகிராஃப்' படத்துக்குப் பிறகு மிகவும் பிரபலமானது. அந்தப் பாடலின் இறுதியில் கோமகனும் உணர்வுபூர்வமாகப் பாடியிருப்பார்.

கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு நிகழ்ச்சியுமே இல்லாமல் கோமகன் இசைக்குழு மிகவும் கஷ்டப்படுவதாகத் தகவல் பரவியது. இதைக் கேள்விப்பட்டு இயக்குநர் சேரன் உடனடியாக கோமகனைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.

இயக்குநர் சேரன் பேசியது தொடர்பாக கோமகன் கூறியிருப்பதாவது:

"சேரன் சார் எங்கள் அனைவரிடமும் பேசியதற்கு நன்றி. இசை நிகழ்ச்சி ரொம்பவே குறைந்துவிட்டது. 'ஆட்டோகிராஃப்' படத்துக்குப் பிறகு 6-7 வெளிநாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சி செய்தோம். நிறைய நிகழ்ச்சிகள் கிடைத்தன. போதுமான அளவுக்கு மேல் வருமானம் வந்து கொண்டிருந்தது. எல்லாருமே ரொம்ப சந்தோஷமாகக் கடந்த காலங்கள் உண்டு.

கடந்த 2-3 ஆண்டுகளாக சரியான இசை நிகழ்ச்சிகள் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தோம். இசை நிகழ்ச்சிகள் இருந்தன. ஆனால், ரொம்பக் குறைவு. அதிலும் இந்த மார்ச் மாதத்திலிருந்து கரோனா அச்சுறுத்தலால் எங்கள் குழு மட்டுமல்ல, அனைத்து இசைக் குழுக்களும் கஷ்டப்படுகின்றன. குறிப்பாக எங்களுடைய இசைக் குழுவினர் வேறு எந்தவொரு தொழிலுக்கும் போக முடியாத நிலை. இதுவும் கடந்து போகும், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்னும் வரப்போகிற மாதங்களில் எங்கள் குழுவினர் அனைவருக்குமான நன்மைகள் பலர் மூலமாக கிடைக்கும், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

'ஆட்டோகிராஃப்' படத்தின் 'ஒவ்வொரு பூக்களுமே' டீம் கஷ்டப்படுகிறார்கள் என்ற தகவலைக் கேட்டவுடன் உடனே அழைத்துப் பேசினீர்கள். நிச்சயமாகவே நீங்கள் அழைத்துப் பேசியது பெரிய ஆசிர்வாதம். பெயரும் புகழும் வருவதற்குக் காரணமே நீங்கள் கொடுத்த வாய்ப்பு தான் சேரன் சார். மீண்டும் வெளிச்சப் போட்டுக் காட்டும் வகையில் உங்கள் படத்திலோ, நண்பர்கள் படத்திலோ வாய்ப்பு ஏற்படுத்தித் தாருங்கள் சார். அப்படியொரு வாய்ப்பு எங்களுடைய 20 குடும்பங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். 'ஆட்டோகிராஃப் 2' எடுக்கிறீர்கள் என்று சிலர் செய்திகள் படித்துக் காட்டினார்கள். நீங்கள் நன்றாக இருக்க வேண்டும். உங்கள் மூலமாக நாங்களும் நன்றாக இருக்க வேண்டும்".

இவ்வாறு கோமகன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE