‘அழகான படமாக இருக்கும்’ - ‘தி பேட்மேன்’ குறித்து ஆன்டி செர்கிஸ் 

மைக்கேல் கீடன், வால் கில்மர், ஜார்ஜ் க்ளூனி உள்ளிட்ட பல நடிகர்கள் பேட்மேன் கதாபாத்திரத்தில் இதுவரை நடித்துள்ளனர். ஆனால், கிறிஸ்டியன் பேல் நடிப்பில் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் வந்த 'பேட்மேன் பிகின்ஸ்' திரைப்படம்தான், பேட்மேன் கதாபாத்திரம் எப்படி உருவானது என்பதைச் சொல்லியது.

தொடர்ந்து 'டார்க் நைட்', 'டார்க் நைட் ரிட்டர்ன்ஸ்' என இரண்டு படங்களுடன் இந்தத் திரை வரிசையிலிருந்து நோலன் விலகினார். இதற்குப் பின் ஸாக் ஸ்னைடர் இயக்கத்தில் பென் ஆஃப்லெக் பேட்மேனாக நடிக்க, 'பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன், 'ஜஸ்டிஸ் லீக்' ஆகிய படங்கள் வெளியாயின.

தற்போது ராபர்ட் பேட்டின்சன் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடிக்க, மேட் ரீவ்ஸ் 'தி பேட்மேன்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். பேட்மேன் கதைகளில் வரும் ஆல்ஃப்ரெட் கதாபாத்திரத்தில் ஆன்டி செர்கிஸ் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படம் குறித்து ஆன்லைன் பேட்டி ஒன்றில் பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார் ஆன்டி செர்கிஸ். அதில் அவர் கூறியிருப்பதாவது:

''இந்த ‘பேட்மேன்’ திரைப்படம் ஆல்ஃப்ரெட் மற்றும் ப்ரூஸ் (பேட்மேனின் நிஜப்பெயர்) இருவருக்கும் இடையிலான உணர்வுபூர்வமான தொடர்பைப் பற்றிய படமாக இருக்கும். நோலனின் பேட்மேன் படங்களில் ஆல்ஃப்ரெடாக நடித்த மைக்கேல் கெய்ன் அற்புதமான மனிதர். அவருடைய கதாபாத்திரம் ஆளுமைமிக்கது. அதன் அருகில் கூட நான் இன்னும் செல்லவில்லை. அதை நீங்களே தெரிந்து கொள்வீர்கள். இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது ஷேக்ஸ்பியரின் கதைகளில் நடிப்பது போன்றது. நமக்கு முன்னால் நடித்தவர்களின் நடிப்பைப் பார்த்து நமக்கென்று ஒரு தனி ஸ்டைலை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.

ஊரடங்கால் பாதியில் நின்று போன படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் எனத் தெரியவில்லை. எப்படி இருந்தாலும் இது ஒரு அழகான படமாக இருக்கும்''.

இவ்வாறு ஆன்டி செர்கிஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE