வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்கர் விழா ஒத்திவைப்பு? 

உலகம் முழுவதும் கோரத் தாண்டவம் ஆடிவரும் கரோனா வைரஸால் இந்த ஆண்டு நடைபெறவேண்டிய சினிமா படப்பிடிப்புகள், நிகழ்வுகள், விருது நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் ஆண்டுதோறும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியும் ஒத்திவைக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி நடைபெறுவதாகத் திட்டமிடப்பிட்டிருந்த ஆஸ்கர் விருது நிகழ்ச்சி நான்கு மாதங்கள் தள்ளிப்போய் ஜூன் அல்லது ஜூலை மாதம் நடைபெறும் என்றும் அதற்கான பேச்சுவார்த்தையை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

கரோனா அச்சுறுத்தலால் ஹாலிவுட்டின் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் படங்களின் படப்பிடிப்பு மற்றும் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளன. இதனால் பெரும்பாலான படங்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டே ஆஸ்கர் குழுவினர் விருது நிகழ்ச்சியை ஒத்திவைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்த வருட ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், இணையத்தில் ஸ்ட்ரீமிங்கில் வெளியான படங்களை மட்டுமே அனுமதிக்கவுள்ளதாக ஆஸ்கர் குழு தெரிவித்திருந்தது. இந்தச் சூழலில் தற்போது ஆஸ்கர் விழாவும் ஒத்திவைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 93 ஆண்டுகளில் ஆஸ்கர் விழா ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல் முறை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE