டிஜிட்டல் வெளியீட்டுக்கு மாறிய பெண்குயின்

கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'பெண்குயின்' திரைப்படம் நேரடியாக டிஜிட்டலில் வெளியாகவுள்ளது.

தமிழில் 'சர்கார்' படத்துக்குப் பிறகு புதிதாக எந்தவொரு படத்திலுமே ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார் கீர்த்தி சுரேஷ். அந்தப் படத்துக்குப் பிறகு புதுமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, தமிழில் அந்தப் படத்தின் பணிகள் தொடங்கப்பட்டன.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க கொடைக்கானலில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளராக கார்த்திக் பழனி, எடிட்டராக அனில் க்ரிஷ் ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்து வந்தார்கள். முழுக்க த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் அனைத்துக் காட்சிகளையும் படமாக்கிவிட்டுத் திரும்பியது படக்குழு. 'பெண்குயின்' என்று பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானது.

இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, வெளியீட்டுக்கு தயாராக இருந்தது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து தயாராக இருக்கும் படங்களை அமேசான் நிறுவனம் நேரடி டிஜிட்டல் வெளியீட்டுக்குக் கைப்பற்றி வருகிறது.

'பொன்மகள் வந்தாள்', 'டக்கர்' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'பெண்குயின்' படத்தையும் அமேசான் நிறுவனம் கைப்பற்றிவிட்டது. இது தொடர்பான பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு, ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE