‘ஃபென்டாஸ்டிக் 4’ தோல்வியால் அனைத்தையும் இழந்தேன்: இயக்குநர் ஜோஷ் ட்ராங்க் 

மார்வெலின் புகழ்பெற்ற காமிக்ஸ் ‘ஃபென்டாஸ்டிக் 4’. இதை அடிப்படையாகக் கொண்டு 2015 ஆம் ஆண்டு ஜோஷ் ட்ராங்க் இயக்கத்தில் ‘ஃபென்டாஸ்டிக் 4’ திரைப்படம் வெளியானது. இதை 20-வது சென்சுரி நிறுவனம் தயாரித்தது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் தோல்வியைச் சந்தித்தது. இப்படத்தின் தோல்விக்கு இயக்குநர் ஜோஷ் ட்ராங்கே ஒட்டுமொத்தக் காரணம் என்று விமர்சகர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் இன்று (12.05.2020) ஜோஷ் ட்ராங்க் இயக்கத்தில் ‘அல் கபோன்’ என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. ‘ஃபென்டாஸ்டிக் 4’ திரைப்படத்தின் தோல்வி குறித்தும் அது தன் வாழ்க்கையில் எந்தவிதத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது என்பது குறித்தும் ஜோஷ் ட்ராங்க் மனம் திறந்துள்ளார்.

இதுகுறித்து ஜோஷ் ட்ராங்க் கூறியுள்ளதாவது:

''எனக்கு ‘அல் கபோன்’ திரைப்படம் எடுத்த எடுப்பிலேயே கிடைத்துவிடவில்லை. என் வாழ்வின் மிகவும் மோசமான காலகட்டத்தில்தான் எனக்கு அது கிடைத்தது. ‘ஃபென்டாஸ்டிக் 4’ ரிலீஸாகும் வரை என் வாழ்க்கை மேம்பட்டதாக இருந்தது. அதன் தோல்விக்குப் பிறகு என் வீட்டின் பின்புறத்தில் அமர்ந்து தொடர்ச்சியாக சிகரெட்டுகளைப் பிடித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய வங்கிக் கணக்குகள் அனைத்தும் காலியாகி விட்டன. அடுத்த சில மாதங்களுக்கு என்ன செய்யப் போகிறேன் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

இந்தத் தோல்வி அனைத்துக்கும் காரணம் ஜோஷ் ட்ராங்க் மட்டுமே என்று ஊடகங்கள் தொடர்ச்சியாக எழுதின. அவற்றை முதலில் படிக்கும்போது என்னை நான் தற்காத்துக் கொள்ளவேண்டும் என்று தோன்றியது. ஆனால் இவற்றிலிருந்து என்னை என்னால் தற்காத்துக் கொள்ளமுடியாது என்று தெரியவந்தபோது நான் அமைதியாக அனைத்தையும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டேன். என்னுடைய வாழ்க்கை என் கட்டுப்பாட்டில் இல்லை. பணத்தை இழந்தேன், வேலையை இழந்தேன்.

‘ஃபென்டாஸ்டிக் 4’ தோல்வியே ‘அல் கபோன்’ உருவாகக் காரணமாக இருந்தது. இப்படியே தொடர்ந்து அமர்ந்த் யோசித்துக் கொண்டிருந்தபோது சிறுவயதில் படித்த அல் கபோனின் வரலாறு என் தலையில் உதித்தது''.

இவ்வாறு ஜோஷ் ட்ராங்க் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE