'பிளாக் விடோ'வாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? - ஸ்கார்லெட் ஜொஹான்ஸன் பகிர்வு

'பிளாக் விடோ' கதாபாத்திரத்துக்கு முதலில் தான் தேர்வு செய்யப்படவில்லை என்ற ரகசியத்தைச் சொல்லியிருக்கிறார் நடிகை ஸ்கார்லெட் ஜொஹான்ஸன்.

மார்வல் சூப்பர்ஹீரோ கதாபாத்திரமான 'பிளாக் விடோ', 'அயர்ன் மேன் 2' திரைப்படத்தின் மூலம் மார்வல் சினிமா உலகம் என்று சொல்லப்படும் திரைப்பட வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 'அவெர்ஞ்சர்ஸ்', 'விண்டர் சோல்ஜர்', 'ஏஜ் ஆஃப் அல்ட்ரான்', 'சிவில் வார்', 'தார் ராக்னராக்', 'இன்ஃபினிடி வார்', 'எண்ட்கேம்' உள்ளிட்ட படங்களில் இந்த கதாபாத்திரம் முக்கியப் பங்கு வகித்திருந்தது.

இப்போது 'பிளாக் விடோ' கதாபாத்திரத்தின் ஆரம்பக் கதை தனித் திரைப்படமாக உருவாகியுள்ளது. மே 1 இந்தப் படம் வெளியாகவிருந்தது. ஆனால் கரோனா நெருக்கடியால் தற்போது நவம்பர் மாத வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது பற்றி ஜொஹான்ஸன் அண்மையில் பேசியுள்ளார்.

"நான் (அயர்ன் மேன் 2 இயக்குநர்) ஜான் ஃபேவ்ரூவை சந்திக்கச் சென்றிருந்தேன். அந்த சந்திப்பு நன்றாகப் போனது ஆனால் அவர் ஏற்கனவே 'பிளாக் விடோ' கதாபாத்திரத்தில் நடிக்க எம்லி ப்ளண்டை தேர்வு செய்து வைத்திருந்தார். நான் அவருடன் பணியாற்ற ஆர்வமாக இருந்தேன். எனவே, 'ப்ளண்ட் நடிக்கவில்லையென்றால் நான் தயாராக இருக்கிறேன், என்னை எப்போது வேண்டுமானாலும் அழையுங்கள்' என்று சொல்லிவிட்டு வந்தேன்.

நீங்கள் ஒரு விஷயத்துக்காக நிராகரிக்கப்படுகிறீர்கள். ஆனால் மீண்டும் அதுவே உங்களைத் தேடி வருவதுதான் மிகச் சிறந்த விஷயம். அப்போது அந்த விஷயத்தின் மீது நீங்கள் இன்னும் அதிக கவனம் செலுத்துவீர்கள். நான் அந்த கதாபாத்திரத்துக்கு இரண்டாவது தேர்வாக இருந்தாலும் அதுதான் நான் பிரபலமாவதற்குக் காரணமாக இருந்திருக்கிறது" என்று ஜொஹான்ஸன் கூறியுள்ளார்.

'எ கொயட் ப்ளேஸ்', 'சிகாரியோ', 'எட்ஜ் ஆஃப் டுமாரோ' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள எமிலி ப்ளண்ட்டும் ஹாலிவுட்டின் பிரபல நடிகர்களில் ஒருவர். ஏற்கனவே அவர் ஃபாக்ஸ் நிறுவனத்திடம் போட்டிருந்த ஒப்பந்தத்தினால் அவரால் பிளாக் விடோ கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போனது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE