இயக்குநர் ராம் எப்போதும் சவால்கள் தருவார்: ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர்

இயக்குநர் ராம் எப்போதும் எனக்கு சவால்கள் தருவார் என்று ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக வலம் வருபவர் எஸ்.ஆர்.கதிர். 'கற்றது தமிழ்', 'சுப்பிரமணியபுரம்', 'நாடோடிகள்', 'கிடாரி', 'அசுரவதம்' உள்ளிட்ட பல படங்களை தனது ஒளிப்பதிவின் மூலம் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவர். தற்போது சிம்புதேவன் இயக்கி வரும் 'கசடதபற' படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பல்வேறு இயக்குநர்களிடம் பணிபுரிந்த எஸ்.ஆர்.கதிர், காட்சியமைப்புக்கு முழு சுதந்திரம் அளிக்கும் இயக்குநர்களிடம் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேட்டியொன்றில் பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"இயக்குநர் ராம் எப்போதும் எனக்கு சவால்கள் தருவார். பல வகையான இடங்களில் படம் எடுப்பார், அது நமக்கு புதுப் புதுக் காட்சிகளைக் காட்டும் உத்வேகத்தைத் தரும். அதேநேரம் கெளதம் மேனன், ஜெயப்பிரகாஷ் ஆகியோருடன் பணியாற்றும்போது அவர்கள் உங்களுக்கு முழு சுதந்திரத்தை அளித்து விடுவார்கள். ஒரு ஷாட்டை மாற்றியமைக்கும் தேவை வந்தால் மட்டுமே என்னிடம் பேசுவார்கள். 'அசுரவதம்' படத்தில் பணியாற்றும் போது இயக்குந்ர மருது திரைக்கதை எழுதும்போதே காட்சியமைப்புக்கான குறிப்புகளையும் எழுதியிருந்தார். அதனால் எங்கள் வேலை சுலபமாக முடிந்தது.

சில நேரங்களில் வசனம், உணர்ச்சிகள், முகபாவத்துக்கு சில இயக்குநர்கள் முக்கியத்துவம் தரும்போது நாம் என்ன மாதிரியான ஷாட் வைக்கிறோம் என்பதை விளக்க வேண்டும். அவர்கள் திருப்தியடையவில்லை என்றாலும் கூட ஏன் நாம் அதை அப்படி வைக்கிறோம் என்பதை விளக்கிச் சொல்ல வேண்டும். பணியாற்றும் விதம் என்பது ஒவ்வொரு இயக்குநரிடமும் ஒவ்வொரு விதமாக இருக்கும்".

இவ்வாறு எஸ்.ஆர்.கதிர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE