20க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களின் இறுதிக்கட்டப் பணிகள்: பட்டியல் வெளியிட்ட பெப்சி

By செய்திப்பிரிவு

52 நாட்கள் முடக்கத்துக்குப் பிறகு தமிழ்ப் படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

கரோனா அச்சுறுத்தலால் மார்ச் 19-ம் தேதியிலிருந்து தமிழ்த் திரையுலகில் எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. சில தினங்களுக்கு முன்பு தொழில்துறையினருக்கு மட்டும், நிபந்தனைகளுடன் தொழில் தொடங்க அனுமதியளித்தது தமிழக அரசு. இதனைத் தொடர்ந்து பெப்சி அமைப்பு மற்றும் தயாரிப்பாளர்கள், தமிழக அரசுக்கு இறுதிக்கட்டப் பணிகளைத் தொடங்குவதற்கு மட்டும் அனுமதியளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இதனைப் பரிசிலீத்த தமிழக அரசு, இன்று (மே 11) முதல் இறுதிக்கட்டப் பணிகளுக்கு மட்டும் நிபந்தனைகளுடன் அனுமதியளித்தது. ஆகையால் 52 நாட்கள் முடக்கத்திற்குப் பிறகு தமிழ் சினிமா பணிகள் இன்று (மே 11) முதல் தொடங்கப்பட்டுள்ளன.

இன்று எந்தப் படத்தின் பணிகள் நடைபெறவுள்ளன, நாளை என்ன படத்தின் பணிகள் தொடங்கவுள்ளன என்பது குறித்து பெப்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"கரோனா வைரஸ் பாதிப்பில் தமிழ்த் திரைப்படப் பணிகள் 52 நாட்களுக்குப் பிறகு படப்பிடிப்பு அல்லாத மற்ற பணிகள் இன்று தொடங்கப்பட்டன. தமிழக அரசு விதித்துள்ள முகக் கவசம், கையுறை, கிருமிநாசினி மற்றும் சமூக இடைவெளி ஆகிய நிபந்தனைகளுடன் இன்று (மே 11) காலை குரல் பதிவு, படத்தொகுப்பு, கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் போன்ற பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

'இந்தியன் 2' படத்தின் எடிட்டிங் பணிகள் 2 இடங்களில் நடைபெற்று வருகின்றன. விஷால் நடித்துள்ள 'சக்ரா' படத்தின் எடிட்டிங் பணிகள் தொடங்கியுள்ளன. 'ராங்கி' படத்தின் எடிட்டிங் மற்றும் டிஐ பணிகள், 'கபடதாரி' படத்தின் டப்பிங் பணிகள், தர்மராஜ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் எடிட்டிங், 'வெள்ளை யானை' படத்தின் சவுண்ட் மிக்ஸிங் ஆகிய பணிகள் இன்று தொடங்கப்பட்டன.

நாளை (மே 12) 'டாக்டர்' படத்தின் எடிட்டிங், 'சின்னதா ஒரு படம்' படத்தின் டப்பிங், 'மாஸ்டர்' படத்தின் எடிட்டிங், 'பெண்குயின்' படத்தின் டப்பிங், 'பேய் மாமா' படத்தின் டப்பிங், 'பாதாம் கீர்' படத்தின் டப்பிங், 'ஐபிசி 376' படத்தின் டப்பிங், மீனாட்சி சினிமாஸ் நிறுவனம் படத்தின் டப்பிங், 'ரோபர்' படத்தின் டப்பிங், 'மாங்கல்ய தோஷம்' தொடரின் இறுதிக்கட்டப் பணிகள், 'சூர்ப்பனகை' படத்தின் எடிட்டிங், 'சுழல்' வெப் சீரிஸ் எடிட்டிங், 'ஐ எண்ட் எம் ஸ்டுடியோஸ்' படத்தின் டப்பிங், '2nd show' படத்தின் டப்பிங், கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் வெப் சீரிஸின் இறுதிக்கட்டப் பணிகள், 'பூமி' படத்தின் டப்பிங், 'கற்க கசடற' படத்தின் கிராபிக்ஸ் பணிகள், 'மூக்குத்தி அம்மன்' படத்தின் டப்பிங் ஆகிய படத்தின் பணிகள் தொடங்க இருக்கின்றன.

தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் அரசு விதித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றிப் பணிகளைச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். யாராவது ஒருவர் விதிமுறையைப் பின்பற்றாவிட்டாலும் அல்லது கரோனா தொற்று ஏற்பட நமது உறுப்பினர்கள் யாராவது ஒருவர் காரணமாக இருந்தாலும் நமக்கு அரசால் அளிக்கப்பட்டுள்ள அனுமதி ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது என்பதை உணர்ந்து அனைவரும் விதிமுறையைப் பின்பற்றிப் பணி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

பணியின் தன்மை, பணிபுரியும் தொழிலாளர்கள் விவரம், பணியாளர்கள் பணிபுரியும் இடம் ஆகிய விவரங்களை அரசுக்கு அனுப்ப வேண்டியிருப்பதால் அனைத்து சம்மேளன உறுப்பினர்களும் தங்களின் விவரம், தொழில்நுட்பக் கலைஞர்களின் பணியின் விவரம், பணியின் தன்மை ஆகியவற்றை தங்களது சங்கங்கள் மூலம் சம்மேளனத்திற்கு அனுப்பிய பிறகே பணிக்குச் செல்ல வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்"

இவ்வாறு பெப்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE