புலம்பெயர்ந்த பணியாளர்கள் வீடு திரும்ப பேருந்து ஏற்பாடு செய்த நடிகர் சோனு சூட்

மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக அரசாங்கங்களிடமிருந்து அனுமதி பெற்ற பின், சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் புலம் பெயர்ந்த பணியாளர்களுக்காக நடிகர் சோனு சூட் பேருந்து ஏற்பாடு செய்துள்ளார்.

கரோனா நெருக்கடியால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தேசிய அளவில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் புலம் பெயர்ந்த, மற்ற மாநிலங்களில் தினக்கூலியாகப் பணியாற்றும் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுப் போக்குவரத்தும் வசதியும் முடங்கியுள்ளதால் இவர்களில் பலர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

'ஒஸ்தி', 'தேவி', 'அருந்ததி' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகர் சோனு சூட், அப்படி சிக்கித் தவிக்கும் தொழிலாளிகளுக்காக பேருந்து ஏற்பாடு செய்துள்ளார். தானேவிலிருந்து சில பேருந்துகள் திங்கட்கிழமை அன்று கர்நாடகாவின் குல்பர்கா பகுதிக்குச் சென்றது. இவர்களை வழியனுப்பி வைக்கவும் சோனு சூட் பேருந்து நிலையம் வந்திருந்தார்.

"சர்வதேச அளவில் நாம் ஒரு உடல்நலப் பிரச்சினையைப் பேரிடராகச் சந்திக்கும்போது, ஒவ்வொரு இந்தியரும் அவரது குடும்பத்துடனும், அன்பானவர்களுடன் இருக்க வேண்டும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இரண்டு அரசாங்க தரப்பிடமிருந்தும் நான் அதிகாரபூர்வமாக அனுமதி பெற்று, பத்து பேருந்துகளில் இந்தத் தொழிலாளர்கள் அவர்கள் வீடு திரும்புவதற்கான உதவிகளைச் செய்திருக்கிறேன்.

மகாராஷ்டிர அரசாங்கம் அனுமதிக்கான விண்ணப்பம் உள்ளிட்ட விஷயங்களை எளிதாக்கியது. தொழிலாளர்களை மீண்டும் வீடு திரும்ப வரவேற்கும் கர்நாடக அரசைப் பாராட்ட வேண்டும். சிறு குழந்தைகள், வயதான பெற்றோர் என இவர்கள் சாலைகளில் நடப்பதைப் பார்த்த போது நான் உடைந்து விட்டேன். என்னால் முடிந்த வரை இன்னும் மற்ற மாநிலத் தொழிலாளர்களுக்கும் போக்குவரத்து ஏற்பாடு செய்வதைத் தொடர்வேன்" என்று சோனு சூட் கூறியுள்ளார்.

இது தவிர ஜூஹூ பகுதியில் இருக்கும் தனது ஹோட்டலை, களப் பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள தானமாக கொடுத்துள்ளார் சோனு. மேலும் சமீபத்தில் பஞ்சாபில் இருக்கும் மருத்துவர்களுக்காக 1,500 பாதுகாப்பு உபகரணங்களைத் தந்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE