தயாரிப்பாளர் 'தில்' ராஜுவுக்கு இரண்டாவது திருமணம்

தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான 'தில்' ராஜுவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளது.

தெலுங்கு திரையுலகில் பல்வேறு வரவேற்பைப் பெற்ற படங்களைத் தயாரித்தவர் 'தில்' ராஜு. இவரது முதல் தயாரிப்பு 'தில்' என்ற படம் என்பதால் 'தில்' ராஜு என்று அழைக்கப்படுகிறார். முன்னணி ஹீரோக்கள் படங்கள் மட்டுமன்றி, பல்வேறு வித்தியாசமான கதைகளங்கள் கொண்ட சிறுபட்ஜெட் படங்களையும் தயாரித்துள்ளார்.

இவர் தான் '96' படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கி தயாரித்து வெளியிட்டவர் என்பது நினைவுக் கூரத்தக்கது. மேலும், இவருடைய தயாரிப்பில் தான் 'இந்தியன் 2' உருவாவதாக இருந்தது. பின்பு தயாரிப்பு பொறுப்பிலிருந்து விலகிவிட்டார்.

2017-ம் ஆண்டு இவருடைய முதல் மனைவி அனிதா மாரடைப்பால் காலமானார். அதனைத் தொடர்ந்து தனி ஆளாகவே வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். தற்போது தனது மகளின் வற்புறுத்தலால் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார். இவரது திருமணம் இன்றிரவு இவரது குடும்பத்தினரின் கோயிலில் வைத்து நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக 'தில்' ராஜு தனது சமூக வலைதள பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"உலகமே தன்னுடைய இயக்கத்தை நிறுத்தியுள்ள இந்த வேளையில், நம்மில் பலருக்கு தொழில்ரீதியாக எதுவும் சிறப்பாக இல்லை. இப்போதைக்கு என்னுடைய தனிப்பட்ட வாழ்வும் மகிழ்ச்சிகரமாக இல்லை. ஆனால் விரைவில் அனைத்தும் நல்லபடியாக சரியாகும் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கை தரும் உற்சாகத்துடன், ஒரு புதிய தொடக்கமாக என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் மீண்டும் துவங்குகிறேன்"

இவ்வாறு 'தில்' ராஜு தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE