'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படத்தின் பின்னணி: கெளதம் மேனன் பேட்டி

By செய்திப்பிரிவு

'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படத்தின் பின்னணி குறித்து கெளதம் மேனன் பேட்டி அளித்துள்ளார்.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படம் 2010-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் பாடல்கள், கதையமைப்பு, வசனங்கள் என அனைத்து தரப்பிலும் கொண்டாடப்பட்டது.

இதனிடையே, இந்த கரோனா ஊரடங்கில் சில நாட்களுக்கு முன்பு கெளதம் மேனன் இயக்கத்தில் த்ரிஷா ஒரு குறும்படத்தில் நடித்து வந்தார். முழுக்க கெளதம் மேனன் தொலைபேசியில் வீடியோ கால் மூலமாக சொல்ல, அதை வீட்டிலிருந்தபடியே ஷுட் செய்து அனுப்பினார். தற்போது அந்தக் குறும்படத்துக்கு 'கார்த்திக் டயல் செய்த எண்' என்று பெயரிடப்பட்டு, டீஸரை வெளியிட்டுள்ளனர்.

'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் ஜெஸ்ஸி கதாபாத்திரம் கார்த்திக் கதாபாத்திரத்திடம் தொலைபேசியில் பேசுவது போல் இதன் டீஸர் அமைந்துள்ளது. பின்னணியில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இசையுடன் இந்த டீஸர் முடிவடைகிறது. இந்த டீஸர் 'விண்ணைத்தாண்டி வருவாயா' ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

இந்தக் குறும்படம் தொடர்பாக கெளதம் மேனனிடம் கேட்ட போது, "சிம்பு பிஸியாக இருப்பார். அதுவும் இந்த தருணத்தில் ஏதாவது ஒன்று பண்ணிட்டு இருப்பார். ஆகையால், இதில் சிம்பு தான் நடித்துள்ளாரா அல்லது வேறொருத்தரை நடிக்க வைத்துள்ளோமா என்பது சஸ்பென்ஸ். இந்த தருணத்தில் வீட்டில் நிறைய நேரம் செலவு செய்கிறோம், குடும்பத்துடன் இருக்கிறோம். ஆகையால் படைப்பாற்றல் திறன் குறைந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த குறும்படத்தை இயக்கியுள்ளேன். எனது குழுவினர் அனைவருமே சமூக இடைவெளியை கடைப்பிடித்து இதில் பணிபுரிந்துள்ளனர்.

ஒருவரை ஒருவர் பார்த்து பணிபுரிவது ரொம்பவே எளிது. ஆனால், இதை இயக்கியது ரொம்பவே கடினமாக இருந்தது. ஒரு பெரிய படத்தை படப்பிடிப்பு செய்வது போல் ரொம்பவே கடினமாக இருந்தது. டப்பிங் அனைத்துமே ஸ்கைப் செயலி மூலமாக மேற்பார்வையிட்டேன். டப்பிங் செய்து வந்ததை எடிட்டிங்கிற்கு அனுப்புவேன். அதை ஒன்றிணைந்து வீடியோ அனுப்புவார். பின்பு நான் வீடியோ பார்த்து கரெக்‌ஷன்ஸ் சொல்வேன். இப்படி ஒவ்வொரு பணியுமே மிகவும் சவாலாக இருந்தது. படைப்பாற்றல் திறன் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக முழுவீச்சில் இதை செய்து முடித்தேன்.

'விண்ணைத்தாண்டி வருவாயா 2' படத்தின் கதையைத் தயாராக வைத்துள்ளேன். அதில் ஒரு பகுதியை எடுத்து தான் குறும்படமாக செய்துள்ளேன். இந்தக் குறும்படத்தில் சிம்பு இருக்கிறாரா, இல்லையா, யார் இசை, யாரெல்லாம் பணிபுரிந்துள்ளனர் என்பது அனைத்துமே சஸ்பென்ஸ். இன்னும் ஒரிரு நாட்களில் குறும்படம் வெளியாகும். அதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE