தமிழ் சினிமா இன்னும் பலவகையான கதைகளை யோசிக்க வேண்டும்: இயக்குநர் வெற்றிமாறன்

தமிழ் சினிமா இன்னும் பலவகையான கதைகளை யோசிக்க வேண்டும் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

அசுரன்' படத்தின் பிரம்மாண்டமான வெற்றியால் இந்திய அளவில் அறியப்படும் இயக்குநராக மாறியுள்ளார் வெற்றிமாறன். 2007-ம் ஆண்டு 'பொல்லாதவன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'ஆடுகளம்', 'விசாரணை', 'வடசென்னை' மற்றும் 'அசுரன்' என இதுவரை 5 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார்.

இவரது அனைத்து படங்களுமே விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டவை. தற்போது அடுத்ததாக இயக்கவுள்ள படங்களுக்கு, இந்த கரோனா ஊரடங்கில் திரைக்கதை அமைக்கும் பணிகளை கவனித்து வருகிறார் வெற்றிமாறன். இந்த கரோனா ஊரடங்கில் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு பேட்டியொன்றை அளித்துள்ளார்.

அதில் தமிழ் சினிமா, மலையாள சினிமா, இந்தி சினிமா குறித்து இயக்குநர் வெற்றிமாறன் கூறியிருப்பதாவது:

"இந்தி சினிமா சர்வதேச ரசிகர்களுக்கானது. சர்வதேசம் என்றால் மற்ற மொழிகள் பேசும் ரசிகர்களுக்காகவும் எடுக்கப்படுகின்றன. தமிழ் சினிமா தமிழர்களுக்காக மட்டும் எடுக்கப்படுகிறது. எனவே நாங்கள் எங்கள் அடையாளங்களைத் தக்க வைத்துக் கொள்கிறோம்.

இந்தி சினிமா இன்னமும் கூட (நம்மைச் சார்ந்த விஷயங்களை) குறிப்பிட்டுப் பேசலாம் என்று நினைக்கிறேன். தமிழ் சினிமா இன்னமும் கூட பலவகையான கதைகளை யோசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சமீபகாலமாக, இந்தி சினிமாவில் பெண்கள், திரையிலும், திரைக்குப் பின்னும் முக்கியப் பங்கு வகிப்பதைப் பார்க்க முடிகிறது.

மலையாள திரையுலகினர் புதிய சுவாரசியமான யோசனைகளுடன் வருகிறார்கள். 'சுடானி ஃப்ரம் நைஜீரியா', 'ஈ.மா.யூ', 'ஜல்லிக்கட்டு', 'பிரதி பூவன்கோழி', 'ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்', 'கும்பளாங்கி நைட்ஸ்' என நிறைய படங்கள் என்னை ஆச்சரியப்படுத்தின. புதிய விஷயங்களை ஆராய இயக்குநர்கள் முயற்சிக்கின்றனர். அதை ஜனரஞ்சகமான முறையில் பொழுதுபோக்கு சினிமாவாகவே செய்கின்றனர்"

இவ்வாறு இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE