’’ஏகப்பட்ட படங்கள்; தொடர்ந்து நைட் கால்ஷீட் கொடுத்தார்;  நண்பர் மோகனை மறக்கவே முடியாது’’ - மனோபாலா நெகிழ்ச்சி

By வி. ராம்ஜி

‘’ஏகப்பட்ட படங்கள் நடித்துக் கொண்டிருந்த மோகன், எனக்காக நைட் கால்ஷீட் ஒதுக்கி நடித்துக் கொடுத்தார். ‘இந்தப் படத்தை மனோபாலா இயக்குவதற்கு வாய்ப்பு கொடுத்தால், உடனடியாக கால்ஷீட் தருகிறேன்’ என்று சொன்னார் மோகன். நண்பர் மோகனை மறக்கவே முடியாது’’ என்று இயக்குநரும் நடிகருமான மனோபாலா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


இதுகுறித்து மனோபாலா தெரிவித்ததாவது :


‘’என்னுடைய முதல் படம் ‘ஆகாய கங்கை’. கார்த்திக்கும் சுஹாசினியும் நடித்தார்கள். ஆனால் இந்தப் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. இந்தப் படத்துக்குப் பிறகு எனக்கு டைரக்‌ஷன் சான்ஸ் கிடைக்கவே இல்லை.


கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் படமே இல்லாமல் அலைந்து கொண்டிருந்தேன். நடிகர் மோகன் எனக்கு நல்ல நண்பர். அடிக்கடி அவரை சந்திப்பேன். வாய்ப்பு கிடைக்காத நிலையைச் சொல்லுவேன்.


அப்படித்தான் ஒருமுறை, மனம் நொந்துபோயிருந்த நான், மோகனிடம் சொல்லிப் புலம்பினேன். ‘ஒரேயொரு சான்ஸ் கிடைச்சா, எங்கேயோ போயிருவேன்’ என்று சொல்லி அழுதேன். சொல்லிவிட்டு, திருச்சிக்குச் சென்றேன்.


திருச்சியில் உறையூரில் உள்ள வெக்காளி அம்மன் கோயிலுக்குச் சென்றேன். சக்திவாய்ந்த தெய்வம் அவள். அம்மனிடம் என் மனக்குமுறலையெல்லாம் கொட்டித்தீர்த்தேன். அங்கே பிரார்த்தனைச் சீட்டு கட்டுவது பிரசித்தம். ‘இயக்குநராக ஜெயிக்க வேண்டும்’ என்று பிரார்த்தனைச் சீட்டு கட்டி, வேண்டிக் கொண்டேன்.
பிறகு சென்னைக்கு வந்து இறங்கிய போது என் கையில் 50 ரூபாய்தான் இருந்தது. பாண்டிபஜாரில் உள்ள கையேந்தி பவனில் தோசை வாங்கிச் சாப்பிடலாம் என்று நின்றிருந்தபோது, ‘டைரக்டரே...’ என்றொரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். கலைமணி சார்.


‘உன்னை எங்கெல்லாம் தேடுறது. மோகன்கிட்ட கால்ஷீட் கேட்டேன். உன்னை டைரக்டராப் போடுறதா இருந்தா, உடனே கால்ஷீட் தரேன்னு சொல்லிட்டாருய்யா. உடனே வா மோகனைப் பாக்கலாம்’னு சொன்னாரு. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியாம, வாயடைச்சு நின்னேன். எனக்கு தோசை வாங்கிக் கொடுத்தார்.
மோகன்கிட்ட போனோம். அந்த காலகட்டத்துல மோகன் கால்ஷீட் கிடைக்கறது ரொம்ப ரொம்ப கஷ்டம். அவ்வளவு சுலபமா கிடைச்சிடாது. காத்திருக்கணும். ஆனா, உடனே கால்ஷீட் தரேன்னு சொன்னார். பகலெல்லாம் நடிக்க ஏற்கெனவே கால்ஷீட் கொடுத்துட்டேன். அதனால தினமும் நைட்டு நடிச்சுக் கொடுக்கறேன்னு சொன்னார்.
முழுக்க நைட்டுங்கறதால, அதுக்குத் தகுந்த மாதிரி கதையை ரெடி பண்ணினார் கலைமணி சார். கிட்டத்தட்ட ஒரு இங்கிலீஷ் படம் மாதிரி பண்ணிருந்தோம். மிகப்பெரிய ஹிட்டடிச்சுச்சு. அந்தப் படம்... ‘பிள்ளைநிலா’. இந்தப் படம் எனக்கு மிகப்பெரிய லிப்ட்டைக் கொடுத்துச்சு. சரியான சமயத்துல, மோகன் கொடுத்த வாய்ப்பு அது. அதுக்குப் பிறகு, எனக்கு வரிசையாக படங்கள் இயக்கும் வாய்ப்புகள் வந்தன. நானும் பிஸியான இயக்குநரானேன். வெற்றிப்பட இயக்குநர் என்று ஒரு ரவுண்டு வந்தேன். அப்புறம் ஸ்டில்ஸ் ரவி தயாரிச்ச படத்தையும் மோகனை வைத்து இயக்கினேன்.


நண்பர் மோகனை என்னால் மறக்கவே முடியாது.


இவ்வாறு மனோபாலா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE