கரோனா நெருக்கடி: தத்தளிக்கும் கிராஃபிக்ஸ் துறை; அச்சத்தில் பணியாளர்கள்

By செய்திப்பிரிவு

க.விக்னேஷ்வரன்

பொது முடக்கத்தால் முழுக்க முழுக்க முடக்கப்பட்ட துறைகளில் தமிழ் திரைத்துறை முதன்மையானது. திரைத்துறை என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது நடிகர்கள் இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், படத்தொகுப்பாளர்கள்தான். மேலே குறிப்பிட்டவர்களின் பங்களிப்பைப் போலவே திரைத்துறையில் முக்கியமாகப் பங்களிப்பவர்கள் கிராஃபிக்ஸ் வடிவமைப்பாளர்கள். அதிகமாக மக்களால் அடையாளம் காணப்படாமல் திரைமறைவில் இவர்கள் செய்யும் பணிதான் சினிமாவை போலித்தனம் இன்றி ஓர் உண்மை அனுபவமாக ரசிகர்களை உணரச்செய்கிறது.

இந்த கரோனா முடக்கத்தால் கிராஃபிக்ஸ் துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி பலரிடம் பேசிய போது, சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

பொதுவாக ஒரு படத்துக்கு கிராஃபிக்ஸ் வடிவமைப்பு என்பது பல படிநிலைகளில் தேவைப்படும். டைட்டில், ஃபர்ஸ்ட் லுக்கில் ஆரம்பித்து இறுதியாகக் காட்சிகளில் இருக்கும் பிழைகளைத் திருத்துவது என்று பல வேலைகள் இருக்கிறது. ஒவ்வொரு நிறுவனத்திலும் சுமார் 100 பேர் வேலை செய்கிறார்கள். இந்த பொது முடக்கம் ஆரம்பித்ததிலிருந்து ஒரு வேலையும் இல்லை.

நிறுவனத்தின் அடித்தளமாக இருக்கும் திறமையான பணியாளர்களை இழப்பது என்பது தொழிலுக்கு பெரும் நஷ்டம். வேலையே இல்லை என்றாலும் அவர்களுக்கு எங்களுடைய சேமிப்பிலிருந்து சம்பளம் கொடுத்து வருகிறார்கள். இதுபோக கட்டிட வாடகை போன்ற இதர செலவுகள் வேறு. தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்லாமல் பல ஹாலிவுட் படங்களுக்கும் சின்ன சின்ன கிராஃபிக்ஸ் வேலைகள் சென்னையில் செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் நிலைமை இங்கே இருப்பதைவிட மோசமாக இருப்பதால், அவர்களுக்கு வரவேண்டிய பணமும் வந்து சேரவில்லை. அவர்கள் பணம் அனுப்ப முன்வந்தாலும் சர்வதேச வங்கிப் பரிமாற்றத்தில் ஆள் பற்றாக்குறையால் அதுவும் சிக்கலாக உள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள பல கிராஃபிக்ஸ் நிறுவனங்களை மொத்தமாக இழுத்து மூடிவிட்டார்கள். அங்கே வேலைப் பார்த்தவர்களின் வாழ்க்கை இனி என்னவாகும் என்பது கேள்விக்குறிதான். இப்போது இறுதிக்கட்டப் வேலைகளை செய்துகொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. அப்படி இருந்தாலும் பொது முடக்கத்துக்கு முன்பு பெரும்பாலும் முடிக்கப்பட்ட படங்களுக்கான பணிகள் மட்டுமே கிடைக்கும். அது மிகவும் சொற்பமான அளவுக்குத்தான் இருக்கும்.

சினிமா திரையரங்கங்கள் எப்பொழுது முழு வீச்சில் திறக்கப்படுகிறதோ அப்பொழுது தான் திரைத்துறையினர் வாழ்க்கை சமநிலைக்குத் திரும்பும். ஏனென்றால் திரையரங்கை நம்பி தான் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். தயாரிப்பாளர்களை நம்பித் தான் கிராஃபிக்ஸ் நிறுவனங்கள் பணிபுரிந்து வருகின்றன.

மேலும், இது தொடர்பாக சென்னையில் ஃப்ரிலேன்ஸ் கிராஃபிக் வடிவமைப்பாளராக இருக்கும் தினேஷிடம் பேசும் போது “நான் ராஜிவ் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றும் போதுதான் கிராஃபிக்ஸ் வடிவமைப்பு துறையில் ஈடுபாடு ஏற்பட்டு வந்தேன். என்னைப்போல் பல இளைஞர்கள் கிராஃபிக்ஸ் துறையில் நல்ல எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கையில் இதற்காகக் கடும் முயற்சி எடுத்து படித்துவிட்டு வந்துள்ளார்கள்.

சமீபமாகத்தான் சினிமாவில் கிராஃபிக்ஸ் துறை பெரும் வளர்ச்சியை எட்டிவருகிறது. நான் படங்களுக்கு போஸ்டர் உருவாக்கித்தரும் வேலையைச் செய்துவருகிறேன். இந்த பொது முடக்கம் ஆரம்பித்ததிலிருந்து ஒரு வேலை கூட வரவில்லை. கிராஃபிக்ஸ் வடிவமைப்பு தவிர்த்து நான் வேறு சில வேலைகளும் செய்வதால் என்னால் ஓரளவுக்குச் சமாளிக்க முடிகிறது.

ஆனால் என்னுடைய நண்பர்கள் சிலருக்கு டிசைனிங் தவிர்த்து வேறு வேலைகள் தெரியாது. அவர்களின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது. மக்கள் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பி ஒவ்வொரு துறைக்கும் பொது முடக்கம் தளர்த்தப்படும் என்று தெரிகிறது. அப்படி நடந்தாலும் கடைசியாகத்தான் பொழுதுபோக்கு அம்சங்களில் கவனம் செலுத்தப்படும். அதுவரை சினிமா சார்ந்து இயங்கும் தொழிலாளர்களின் வாழ்வு பெரும் கேள்விக்குறிதான்” என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்