’தொடர்ந்து மெகா ஹிட் கொடுக்கறியே... என்ன மேஜிக்? எனக்கும் சொல்லேன்!’ - மோகனிடம் கேட்ட ரஜினி ; நடிகர் மோகன் பிறந்தநாள் ஸ்பெஷல்

மோகன் என்றால் மென்மையான கதாபாத்திரங்களைத் தாங்கி நடிப்பதில் வல்லவர் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். அது ‘மெல்லத்திறந்தது கதவு’, மெளனராகம்’ என நீண்டது. மோகன் என்றால், பாடல்களுக்கு பிரமாதமாக எக்ஸ்பிரஷன்ஸ் கொடுப்பார் என்று பேரெடுத்தார். ‘பயணங்கள் முடிவதில்லை’யில் தொடங்கி, ‘உதயகீதம்’, ‘இதயக்கோயில்’ என நீண்டுக்கொண்டே போனது. மணிவண்ணனின் ‘நூறாவது நாள்’, வில்லனிக் ஹீரோவாக அவரைக் காட்டியது. அந்தக் கதாபாத்திரத்தில், மிரட்டியிருந்தார் மோகன். அந்த வில்லன் கலந்த வேடம், கே. பாலாஜியின் ‘விதி’ உட்பட பல படங்களில் அவரை விளையாடச் செய்தது.

‘கோகிலா’ படத்தில் அறிமுகம் செய்த பாலுமகேந்திராவை குருவாக ஏற்றார் மோகன். பின்னாளில், ‘ரெட்டைவால் குருவி’ படத்தில், மோகனுக்கு காமெடி கலந்த ரோலைக் கொடுத்து, அந்தப் பக்கமும் மோகன் ஜெயிக்கமுடியும்; நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கச் செய்தார் பாலுமகேந்திரா. இது, இயக்குநர் இராம.நாராயணனின் பல படங்களில், அவரை காமெடி ஹீரோவாக்கி அந்தப் பக்கமும் அட்டகாச, ஹாஸ்ய ரவுண்டு வரக் காரணமாக அமைந்தது.

எண்பதுகளில், தயாரிப்பாளர்களுக்குப் பிடித்த ஹீரோ என்றால் அதில் முக்கிய இடம் பிடித்தவர் மோகன் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். கால்ஷீட் கொடுத்துவிடுவார். கொடுத்ததைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கமாட்டார். விட்டுக் கொடுக்கும் குணத்தை இயல்பாகக் கொண்டவர். மார்க்கெட் வேல்யூ உள்ளவர். எப்படிப்பட்ட கதாபாத்திரத்துக்கும் பொருந்தக் கூடியவர். மினிமம் பட்ஜெட்டில் படமெடுக்கலாம். மேக்ஸிமம் வசூலை அள்ளிவிடலாம். முதலுக்கு மோசம் இருக்காது. மோகன் படமென்றால் மினிமம் கியாரண்டி நிச்சயம் என்று தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் இன்றைக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
’மதர்லேண்ட் பிக்சர்ஸ்’ தயாரிப்பாளர் கோவைதம்பி, மோகனை வைத்து பல படங்களை தயாரித்துள்ளார். வெள்ளிவிழாப் படமான ‘நான் பாடும் பாடல்’ மாதிரியான படங்களில், ’உன்னை நான் சந்தித்தேன்’ மாதிரியான படங்களில், கெளரவத்தோற்றத்திலாவது மோகனை நடிக்கவைத்துவிடுவார்கள். அப்படியொரு வெற்றி செண்டிமெண்ட் பல தயாரிப்பாளர்களிடம் இருந்தது.


படத்துக்கு பணம் தரும் பைனான்சியர்கள் கூட, ‘இந்தப் படத்துல மோகன் நடிக்கலையா?’ என்று கேட்பார்களாம். ஆர்.சுந்தர்ராஜனின் ‘நான் பாடும் பாடல்’ படத்துக்குள் இதனால்தான் மோகனை உள்ளே கொண்டுவந்தார்களாம். அவரும் இரண்டே நாள் கால்ஷீட்டில் முழுவதும் நடித்துக் கொடுத்தார் என்று ஆர்.சுந்தர்ராஜன் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாகத் தெரிவித்துள்ளார்.

வயது வித்தியாசமில்லாமல், எல்லோரும் கொண்டாடுகிற மாதிரி நடிகர்கள் பேரெடுப்பது அரிது. அப்படிப் பேரும்புகழும் கொண்ட நடிகர்களில், மோகனுக்கு தனியிடம் உண்டு. அதனால்தான் மோகன் படங்களுக்கு எப்போதுமே நல்ல ஓபனிங் இருந்தது. கமல், ரஜினி படங்கள் ரிலீசான சமயத்தில், மோகன் படமும் ரிலீசாகி, அவர்களை விட மோகன் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற சரித்திரப் பதிவுகளும் நடந்திருக்கின்றன.

‘வாழ்வே மாயம்’ படமும் ‘பயணங்கள் முடிவதில்லை’ படமும் ஒரேசமயத்தில் வருவதாக இருந்ததாகச் சொல்லுவார்கள். ஆனால் எதற்கு ரிஸ்க் என்று, ஜனவரி மாதம் வரவேண்டிய ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தை பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்தார்கள். படம் பல ஊர்களில், பல தியேட்டர்களை வெள்ளிவிழாவைக் கடந்தும் 250 நாட்களைக் கடந்தும் 400 நாட்களைக் கடந்துமாக ஓடி, இமாலய வெற்றியைப் பெற்றது.


ஆனால், பின்னாளில், மோகன் படம் ரிலீசாவதைக் கொண்டே மற்ற பெரிய நடிகர்களின் படங்கள், மாற்றப்பட்டன. வேறு தேதியில் ரிலீஸ் செய்யப்பட்டன. ‘அது எப்படிப்பா நீ மட்டும் தொடர்ந்து மெகாஹிட்டாவே கொடுத்துக்கிட்டே இருக்கே. என்ன மேஜிக் இது? எனக்கும் சொல்லேன்’ என்று ரஜினியே ஒருமுறை கேட்டார் என சமீபத்தில் சந்தித்துப் பேசியபோது அடக்கத்துடன் தெரிவித்தார் மோகன்.

‘கதை நல்லாருக்கா? அதை குடும்பத்தோட எல்லாரும் வந்து பார்ப்பாங்களா?ன்னு பாப்பேன். வேற எதையும் பாக்கமாட்டேன். தயாரிப்பாளர் யாரு, டைரக்டர் யாருன்னெல்லாம் உள்விவரம் சேகரிக்கமாட்டேன். கதை பிடிச்சிருந்துச்சுன்னா, ட்ரீட்மெண்ட் நல்லா இருக்கும்னு தோணுச்சுன்னா ஓகே சொல்லிருவேன்’ என்று சொல்லும் மோகன், தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ஏராளம்.

‘அவர் படத்துல எல்லாப் பாட்டையும் ஹிட்டாக்கிக் கொடுத்துருவார் இளையராஜா. பெரும்பாலான படங்களுக்கு இளையராஜாதான் இசை. அதனாலதான் மோகன் படங்கள் இப்படி ஹிட்டடிச்சிருக்கு’ என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிடமுடியாது. அழுத்தமான கதைகள், உயிரோட்டமான திரைக்கதைகள், கதையின் உணர்வைச் சொல்லுகிற இசை, பாடல்கள், நடிப்பை வெளிப்படுத்துகிற காட்சி அமைப்புகள் என பலதும் கைகோர்த்ததுதான் மோகனின் வெற்றி!

ஐம்பது ரூபாய் முதலீடு செய்து நூறு ரூபாய் சம்பாதிப்பது ஒரு வகை. பத்து ரூபாய் முதலீடு செய்து, நூற்று ஐம்பது ரூபாய் சம்பாதிப்பது இன்னொரு வகை. மோகனின் படங்கள் இரண்டாவது வகை. ஆனால் அவரின் படங்கள் பலவும், முதல் ரகம் கொண்ட தரமான படங்கள் என்று கொண்டாடப்பட்டன. இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகின்றன.

https://www.youtube.com/watch?v=6SRDK4cOwjI&t=35s

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE