தமிழ் கதாநாயகர்கள் இந்திய அளவில் புகழ்பெறுவது மிக அரிதாகவே நிகழ்ந்திருக்கிறது. அந்த அரிதான சாதனையை நிகழ்த்தியவர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். ’ஒய் திஸ் கொலவெறி’ பாடல் மற்றும். ’ராஞ்சனா’ உள்ளிட்ட இந்திப் படங்களில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் அறியப்படும் திரை ஆளுமை ஆகியிருக்கிறார். 'தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ‘ஃபகிர்’ என்னும் ஆங்கிலப் படத்தில் நாயகனாக நடித்ததவர். ஆஸ்கருக்கு பரிந்திரைக்கப்பட்ட ‘விசாரணை’ படத்தை தயாரித்தவர் என சர்வதேச கவனத்தையும் பெற்றிருக்கிறார் இவை தவிர திரைவாழ்வில் பன்முகத் திறமையாளராக இன்னும் பல சாதனைகளைப் புரிந்திருக்கும் தனுஷ் சினிமாவுக்கு அறிமுகமான நாள் இன்று. 18 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் (2002 மே 10) தனுஷ் நாயகனாக அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் வெளியானது.
மீசை அரும்பாத ஒல்லிப் பையன்
’என் ராசாவின் மனசிலே’, ‘ஆத்தா உன் கோயிலிலே’, ‘எட்டுப்பட்டி ராசா’, ‘நாட்டுப்புறப் பாட்டு’ என கிராமிய மணம் கமழும் வெற்றித் திரைப்படங்களைத் தந்தவரான கஸ்தூரி ராஜா நகர்ப்புற விடலைகளின் வாழ்வை மையமாக வைத்து இயக்கிய திரைப்படம்தான் ‘துள்ளுவதோ இளமை’. அவருடைய மூத்த மகனும் இன்று புகழ்பெற்ற இயக்குநர்களில் முக்கியமானவருமான செல்வராகவன் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதி தமிழ் சினிமாவில் அதிகாரபூர்வமாக காலடி எடுத்து வைத்தார். கஸ்தூரி ராஜாவின் இளைய மகன் தனுஷ் இந்தப் படத்தின் கதாநாயகனாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
» வெள்ளிவிழா நாயகன் மோகனுக்கு பிறந்தநாள்!
» நீங்கள் வளரும் இயக்குநரா? - அப்போ, ஷாரூக்கானின் ‘பேய்ப் பட’ போட்டியில கலந்துக்குங்க
சுவாரஸ்யமான திரைக்கதை, துடிப்பான பாடல்கள் என இளைஞர்களை கவரும் அம்சங்கள் நிரம்பிய இந்தப் படம் பெரும் வெற்றிபெற்றது. இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாகவே அறிமுகமாகிவிட்ட யுவன் ஷங்கர் ராஜாவின் இசைப் பயணத்தில் இந்தப் படம் ஒரு முக்கியமான திருப்புமுனை. ஆனால் இந்தப் படத்தின் நாயகனாக மிக ஒல்லியான தேகம், மீசை அரும்பாத முகம், ஆகியவற்றுடன் அறிமுகமான தனுஷ் பெரும்பாலான விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் கண்டுகொள்ளப்படவில்லை. சிலர் அவருடைய ஒல்லியான உடல்வாகுக்காக கிண்டலடிக்கவும் செய்தார்கள். இன்று தனுஷ் அடைந்திருக்கும் உயரத்தை அன்று யாருமே யூகித்திடவில்லை. எந்த ஒல்லியான தேகத்துக்காகக் கிண்டலடிக்கப்பட்டாரோ அதையே தனது வெற்றிக்கான மூல தனங்களில் ஒன்றாக ஆக்கிக்கொண்டார். அதையே ஒரு ட்ரெண்டாக மாற்றினார்.
30 வயதுக்குள் தேசிய விருது
‘துள்ளுவதோ இளமை’ படத்தை அடுத்து செல்வராகவன் இயக்குநராக அறிமுகமான ‘காதல் கொண்டேன்’ படத்தில் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் அசரடித்தார். அந்தப் படம் வணிகரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது. அடுத்ததாக வந்த ‘திருடா திருடி’ திரைப்படமும் அதில் இடம்பெற்ற ‘மன்மதராசா’ பாடலும் தனுஷை ஏ,பி,சி என அனைத்து சென்டர்களிலும் கொண்டு சேர்த்தது.
அடுத்து சில ஆண்டுகளில் வெற்றிகளும் தோல்விகளும் மாறி மாறி வந்தன. மீண்டும் அண்ணன் செல்வராகவனுடன் இணைந்து ‘புதுப்பேட்டை’ படத்தில் நடித்தார். அதில் ஒரு ஏழைச் சிறுவனாக இருந்து படிப்படியாக முன்னேறும் ஒரு அசல் கேங்ஸ்டராக வாழ்ந்து காட்டினார். கேங்ஸ்டர் படங்களில் ‘புதுப்பேட்டை; மிக முக்கியமான படமாக விளங்குகிறது. இயக்குநர் வெற்றிமாறனின் அறிமுகப் படமான ‘பொல்லாதவன்; தனுஷின் நட்சத்திர அந்தஸ்தை மேலும் சில படிகள் உயர்த்தியது. அடுத்தாக வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ திரைப்படத்தில் துடிப்பு மிக்க மதுரைக்கார இளைஞனாக நடித்ததற்காக முதல் தேசிய விருதைப் பெற்றார் தனுஷ். அப்போது அவருக்கு 30 வயதுகூட ஆகியிருக்கவில்லை. மிக இளம் வயதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றவர்களில் ஒருவரானார் தனுஷ்.
முழுமையான கதாநாயகன்
தேசிய விருது பெற்ற பிறகு பரத் பாலா, ஆனந்த் எல்.ராய். பால்கி போன்ற தேசிய கவனம் பெற்ற இயக்குநர்களின் படைப்புகளில் நடித்தார். அதே நேரம் தமிழிலும் தொடர்ந்து பல்வேறு வகைமைகளைச் சேர்ந்த கமர்ஷியல் படங்களில் நடித்தார். ஆக்ஷன். பஞ்ச் வசன, காமடி, சென்டிமெண்ட், காதல், நடனம் என ஒரு கமர்ஷியல் நடிகருக்குத் தேவையான அனைத்திலும் டிஸ்டிங்ஷன் வாங்கும் மாணவராக விளங்குகிறார் தனுஷ். அதே நேரம் தன்னுடைய அசாத்திய நடிப்புத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள படங்களிலும் நடித்துவருகிறார். சொல்லப்போனால் ‘பொல்லாதவன்’, ‘வேலையில்லா பட்டதாரி’ உள்ளிட்ட கமர்ஷியல் படங்களிலும்கூட தனுஷின் சிறப்பான நடிப்பை நின்று ரசிக்க பல தருணங்கள் உள்ளன. ஒரு மிகச் சிறந்த நடிகர் பரபரவென்று நகர வைக்கும் கமர்ஷியல் படங்களிலும்கூட நடிப்புத் திறமையை கவனிக்க வைப்பார். தனுஷ் அப்படிப்பட்ட மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர்.
கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 'அசுரன்' படத்தில் தன்னுடைய அசல் வயதைவிட 20-30 ஆண்டுகள் அதிகமான வயதைக் கொண்டவராகவும் 10-15 ஆண்டுகள் குறைந்த வயதுடையவராகவும் ஒரே படத்தில் நடித்து ஒரே நடிகர் தன் உடல்மொழியிலும் முகபாவங்களிலும் இவ்வளவு மாற்றங்களைக் காண்பிக்க முடியுமா என்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
நடிப்பைத் தாண்டிய சாதனைகள்
ஒரு நடிகராக மட்டும் அல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல துறைகளில் சாதனைகளைப் படைத்திருக்கிறார் தனுஷ். ’ஒய் திஸ் கொலவெறிடி’ (3), ‘வாட்ட கருவாட்’ (வேலையில்லா பட்டதாரி) போன்ற அதிரடி பாடல்களை மட்டுமல்லாமல் ‘பிறைதேடும் நிலவிலே’ (மயக்கம் என்ன), ‘அம்மா’ அம்மா நீ எங்க அம்மா (வேலையில்ல்லா பட்டதாரி)’ போன்ற உணர்வுபூர்வமான பாடல்களையும் எழுதியிருக்கிறார். ‘ஒய் திஸ் கொலவெறி’, ‘ரெளடி பேபி’ (மாரி 2) உட்பட அவர் பாடிய பல பாடல்கள் மிகப் பெரிய வெற்றிபெற்றுள்ளன.
‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ என அவர் தயாரித்த திரைப்படங்கள் சர்வதேச, தேசிய அங்கீகாரங்களைக் குவித்தன. சூப்பர் ஸ்டாரும் தனது மாமனாருமான ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது கூட கமர்ஷியல் மசாலா படங்களை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ‘காலா’ படத்தைத் தயாரித்தார். பா.இரஞ்சித் இயக்கிய அந்தப் படம் அடித்தட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் நில உரிமையைப் பேசியது.
முதிர்ச்சியான படைப்பாளி
இது தவிர ‘பா.பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராகவும் தடம் பதித்த தனுஷ் அந்தப் படத்தில் இரண்டு முதியவர்களுக்கு இடையிலான முதிர்ச்சியான காதலை மிக அழகாகச் சொல்லி முதல் படத்திலேயே மனமுதிர்ச்சியும் விசாலமான பார்வையும் கொண்ட படைப்பாளியாக அறிமுகமானார்.
ஒரு சாதாரண ஒல்லியான தேகம் கொண்ட விடலைப் பயனாக அறிமுகமான தனுஷ் இன்று தன் சாதனைகளால் பிரம்மாண்டமான ஆகிருதியைப் பெற்றிருக்கிறார். திரைப்படங்கள் என்னும் சட்டகத்துக்குள்ளேயே அசலான பன்முகத் திறமையாளர்களில் ஒருவராக பரிணமித்து அனைத்து துறைகளிலும் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கிவருகிறார்.
18 ஆண்டுக் காலத்தில் மிகப் பெரிய அளவில் உயர்ந்து நிற்கும் தனுஷ் வரும் ஆண்டுகளில் இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துவோம்
முக்கிய செய்திகள்
சினிமா
20 mins ago
சினிமா
24 mins ago
சினிமா
57 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago