வெள்ளிவிழா நாயகன் மோகனுக்கு பிறந்தநாள்! 

எடுத்த உடனேயே டாப்கியர் போட்டு, புகழின் உச்சிக்கெல்லாம் காலம் அவரை அழைத்துச் சென்றுவிடவில்லை. கொஞ்சம்கொஞ்சமாகத்தான் வந்தார். நடிக்கவோ நடிகராக வேண்டும் என்றோ ஆசைப்படவும் இல்லை அவர். வங்கி வேலையில் சேர்ந்திருக்கவேண்டியவர். ஆனால், மக்களின் மனவங்கியில், இன்றைக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் போல் கொண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கிறார் அவர். அன்றைக்கு அசலென இவர் வழங்கிய நடிப்பும் நடிப்பால் கிடைத்த சந்தோஷங்களும், இன்றைக்கு வட்டியும்முதலுமாக அன்பைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் ரசிகர்கள். அவர்... மோகன். நடிகர் மோகன். வெள்ளிவிழாநாயகன் மோகன்.

எம்ஜிஆர் - சிவாஜி, கமல் - ரஜினி, அஜித் - விஜய் என்று ஒவ்வொரு காலத்திலும் சினிமாவை ஹீரோக்கள் ஆட்சி செய்தார்கள்; செய்துகொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆரும் சிவாஜியும் இருக்கும்போதே ஜெமினியும் எஸ்.எஸ்.ஆரும் முத்துராமனும் ஜெய்சங்கரும் ஏராளமான வெற்றிப் படங்களைக் கொடுத்தார்கள். அடுத்து வந்த கமல் - ரஜினி காலகட்டத்தில்தான் விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், முரளி என வந்தார்கள். பெரிய பெரிய ஹிட்டுகளைக் கொடுத்தார்கள். இந்தக் கட்டத்தில் வந்த மோகன், புயலாகவெல்லாம் வரவில்லை. வந்து, திடீர் திருப்பங்களையெல்லாம் ஏற்படுத்தவில்லை. ஆனால், மக்களின் மனங்களில் புகுந்து தனக்கென ஒரு பீடத்தை ஏற்படுத்தி அமர்ந்துகொண்டார் என்பதுதான் அவரின் ஸ்பெஷல்!


யதார்த்தமாக திரைத்துறைக்கு வந்ததால்தானோ என்னவோ, மிக மிக யதார்த்தமான நடிப்பையும் படங்களையும் தந்தார் மோகன். கமலுக்கு கன்னடத்தில் முதல்படம் ‘கோகிலா’. பாலுமகேந்திரா இயக்கிய முதல் படமும் இதுவே. இந்தப் படம்தான் மோகனுக்கும் முதல் படம். பிறகு ‘கோகிலா’ மோகன் என்று டைட்டிலில் கூட இடம்பெற்றது. ‘மூடுபனி’யில் அப்படித்தான் டைட்டில் வரும். இரண்டு மூன்று பெயர்களுடன் அவர் பெயரும் சேர்ந்துதான் வந்தது.


மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்திலும் அப்படித்தான். ஆனால் ‘கோகிலா’ மோகன் இல்லை. மோகன் தான். ஆனால் என்ன... இரண்டு மூன்று பெயர்களுடன் டைட்டில் போடப்பட்டது.


இப்படியாக கொஞ்சம்கொஞ்சமாக வளர்ந்தார் மோகன். ‘பசி’ துரையின் ‘கிளிஞ்சல்கள்’ தனி ஹீரோ. தனி டைட்டில். அடுத்து வந்த ஆர்.சுந்தர்ராஜனின் ‘பயணங்கள் முடிவதில்லை’ மோகனின் தனி ராஜாங்கம். பாடகர் கதாபாத்திரம். தமிழ் சினிமாவில் இன்று வரை எத்தனையோ பேர், எத்தனையோ விதமான பாடகர் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆனால், கவசகுண்டலத்துடன் பிறந்த கர்ணன் போல், மோகனுக்கு மைக்கும் பாட்டும் அப்படி பாந்தமாகப் பொருந்திப் போனது. முன்னதாகவே வெற்றியின் ருசி அறிந்த மோகன், இந்த முறை ஆர்.சுந்தர்ராஜனுக்கும் வழங்கினார். அவரின் முதல் வெற்றி. கோவைத்தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ் எனும் நிறுவனத்துக்கும் கிடைத்த முதல் வெற்றி.


இப்படித்தான், இயக்குநர் மணிவண்ணனின் முதல் படமான ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ அதிரிபுதிரி ஹிட்டாகியது. மனோபாலாவின் இரண்டாவது படமான ‘பிள்ளைநிலா’ வெற்றி பெற்றது. கே.ரங்கராஜின் ‘நெஞ்சமெல்லாம் நீயே’ நாயகனும் இவர்தான். சில பத்திரிகைகள் ‘மைக்’ மோகன் என்றெல்லாம் எழுதுகிறார்கள். ‘நெஞ்சமெல்லாம் நீயே’ படத்தில், மோகனின் மனைவியான ராதாதான் பாடகி. ‘உதயகீதம்’ படத்தில் மைக் பிடித்தாலும் ‘நூறாவது நாள்’ படத்தில் கத்தியும் துப்பாக்கியும் பிடித்தார். வில்லனிக் ஹீரோவாகவும் மோகன் ரசிக்கவைத்தார். மோகனை ரசித்தார்கள். பாட்டுக்குப் பெயர் போன ‘நான் பாடும் பாடல்’ படத்தில், பாடகி அம்பிகாவின் காதலன் ப்ளஸ் கணவன் மோகன். மருத்துவராக நடித்தார்.


தொழிலதிபராக நடித்தாலும் ஏற்றுக்கொண்டார்கள் ரசிகர்கள். வேலை தேடி அலையும் ‘குங்குமச்சிமிழ்’ மவுத் ஆர்கன் நாயகனையும் ஏற்றுக்கொண்டார்கள். ரேவதியால் குத்துப்படுவதையும் ரசித்தார்கள். ரேவதியைக் கொல்ல முனையும் ‘டிசம்பர் பூக்கள்’ படத்தையும் ஓடவைத்தார்கள். ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’யையும் ரசித்தார்கள். ரெண்டுபொண்டாட்டி ‘ரெட்டைவால் குருவி’ நாயகனையும் சிரித்து ஏற்றார்கள். மனைவி கேட்கும் விவாகரத்தை வழங்கும் ‘மெளனராகம்’ கணவனையும் மதித்துப் போற்றினார்கள்.


இந்த வேடம்தான் என்றில்லாமல், எந்த வேடமும் பொருந்துகிற நாயகனாக மோகன் திகழ்ந்தது இன்னொரு பிளஸ் பாயிண்ட். ‘இது பெரிய நடிகர் படம் என்றோ இது பெரிய கம்பெனி படம் என்றோ பெரிய இயக்குநர் படம் என்றோ இசையமைக்கமாட்டார் இளையராஜா. அவருக்கு அவர் படம். அப்படித்தான் எல்லார் படங்களுக்கும் இசையமைத்துக் கொடுத்தார். ராஜாவின் பாடல்களெல்லாம் மோகன் படங்களுக்கு அப்படித்தான் கிடைத்தன.


மோகனின் இன்னொரு ஸ்பெஷல்... எல்லோருக்கும் பிடித்தவராக இருப்பது. சம்பள விஷயத்தில் கறார் காட்டாததால், தயாரிப்பாளர்களுக்குப் பிடித்தவரானார் மோகன். கதையில் குறுக்கீடு செய்யாமல், இந்த ஹீரோயினைப் போடுங்க என்றெல்லாம் சொல்லாமல், ஷூட்டிங்கிற்கு குறித்த நேரத்தில் வந்துவிடுவதால், இயக்குநர்களுக்குப் பிடித்தவரானார். இப்படித்தான் சகநடிகர்களுக்கும் பிடித்தவரானார். முக்கியமாக, தன் கதாபாத்திரங்களின் மூலமும் நடிப்பின் மூலமும் ரசிகர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் பிடித்தவரானார்.


நடித்துக் கொண்டிருக்கிற சமயத்திலேயே, ஃபீல்டில் இருக்கிற சமயத்திலேயே மறந்துவிடுகிற மக்களும் ரசிகர்களும் இருக்கிற உலகில், பல வருடங்களாக நடிக்காத போதும், மோகனைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.


வெள்ளிவிழா நாயகன் மோகனுக்கு இன்று பிறந்தநாள்.


மனம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள் மோகன் சார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE