கரோனா நெருக்கடி எதிரொலி: கோல்டன் க்ளோப் விதிகள் மாற்றம்

ஹாலிவுட் ஃபாரின் ப்ரெஸ் அமைப்பு நடத்தும் கோல்டன் க்ளோப்ஸ் விருதுகளின் அயல்மொழிப் படப் பிரிவுக்கான விதிகளில் சில மாறுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக சிறந்த அயல்மொழிப் படம் என்ற பிரிவில் போட்டியிட வேண்டுமென்றால் அந்தத் திரைப்படம், அது தயாரிக்கப்பட்ட நாட்டில் அக்டோபர் 1லிருந்து டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் வெளியாகியிருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. தற்போது கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு நிலவுவதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பதும் தெரியாத நிலையில் தற்போது இந்த பிரிவுக்கான விதியில் சில மாறுதல்களை விழா அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

தற்போது போட்டியிட விரும்பும் திரைப்படங்கள், எந்த நாட்டிலும், திரையரங்கு, தொலைக்காட்சி, கட்டண திரையிடல், ஸ்ட்ரீமிங் சேவை, சந்தா கட்டி கேபிள் சேனலில் பார்த்தல் என எந்த தளத்திலும் வெளியிடப்பட்டிருக்கலாம். மேலும் விழாவில் நடுவர் குழுவுக்கு படத்தை மொத்தமாகத் திரையிட்டுக் காட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்குப் பதிலாக டிவிடி பிரதியாகவோ, பாதுகாப்பான இணையதள இணைப்பாகவோ திரையிட்டுக் காட்டலாம்.

விதி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டாலும் அடுத்த கோல்டன் க்ளோப் விருது வழங்கும் விழா எப்போது நடைபெறும் என்ற தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE