தனியாகப் பேசிக்கொள்வதில் விருப்பமில்லை: கமல்ஹாசன்

தனியாகப் பேசிக்கொள்வதில் விருப்பமில்லை என்று கமல் நேரலையில் பேசும்போது குறிப்பிட்டுள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளம் மூலம் நேரலைப் பேட்டியாகக் கொடுத்து வருகிறார்கள். இதில் கமல் - விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்ற நேரலைக் கலந்துரையாடல் நிகழ்ச்சி மே 2-ம் தேதி நடைபெற்றது.

இந்த நேரலைப் பேட்டியில், தனது பழைய படங்களின் நினைவுகள், அரசியல் வருகை, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார் கமல்ஹாசன். இதில் எனக்குள் நானே பேசிக் கொள்ளவே மாட்டேன் என்று பதிலளித்துள்ளார் கமல்.

அந்தப் பகுதி:

அபிஷேக்: சோர்ந்திருக்கும் நேரத்தில் நீங்கள் உங்களுடன் பேசியிருக்கிறீர்களா?

கமல்: நான் அப்படிச் செய்பவனில்லை. அமெரிக்கர்கள் காரில் செல்லும்போது தனியாகப் பேசிக்கொண்டே செல்வார்கள். அது ஒருவிதமான மனோவியாதி போல வெட்கமாக இருக்கும். தனியாகப் பேசுவது இயற்கைக்குப் புறம்பானது என்று எனக்குத் தோன்றும். சினிமாவில் கூட அதை விரும்பமாட்டேன்.

நம் ஊரில் பெண்கள் குடும்பக் கஷ்டத்தை எல்லாம் முனகிக் கொண்டே செல்வார்கள். அது வேறு. ஆனால் நகரத்தில் இருக்கும் ஒருவன் அப்படிச் செய்வதை நான் விரும்பவில்லை. இருந்தாலும் 'அவர்கள்' படத்துக்காக வெண்ட்ரிலோகிஸம் (ventriloquism) என்ற ஒன்றை கற்றுக்கொண்டேன். மேடையிலேயே பல பொம்மைகளை வைத்து அதைச் செய்திருக்கிறேன்.

அந்த பொம்மையுடன் பேசும்போது வசனம் தீர்ந்துவிட்டதால் எனது வாழ்க்கைப் பிரச்சினைகளை எல்லாம் அதை வைத்துப் பேச ஆரம்பித்தேன். அப்போது, அமெரிக்கனைப் பார்த்து மனோவியாதி என்று சொன்ன நீயே அதைச் செய்யலாமா என்று தோன்றியது. அந்த பொம்மையை எடுத்து உள்ளே வைத்துவிட்டேன். பேச வேண்டும் போல இருந்தால் நல்ல நண்பனைத் தேடிப் பிடி என்று சொல்லிக்கொண்டேன்.

இவ்வாறு கமல் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE