தமிழக அரசின் அனுமதிக்கு ஆர்.கே.செல்வமணி நன்றி: தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள்

இறுதிக்கட்டப் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பதற்கு ஆர்.கே.செல்வமணி நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தயாரிப்பாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா ஊரடங்கினால் தமிழ்த் திரையுலகில் எந்தவொரு பணிகளுமே நடைபெறாமல் இருந்தது. இதனால் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தொழில்துறையினருக்குப் பல்வேறு விதிமுறைகளுடன் தொழில் தொடங்க அனுமதியளித்துள்ளது தமிழக அரசு.

இதனைத் தொடர்ந்து இறுதிக்கட்டப் பணிகளுக்கு அனுமதியளிக்குமாறு தயாரிப்பாளர்கள், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனை ஏற்று இறுதிக்கட்டப் பணிகளுக்கு மட்டும் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. மே 11-ம் தேதி முதல் என்ன பணிகளுக்கு, எத்தனை பேர் பணிபுரியலாம் என்பதையும் அறிவித்துள்ளது.

தமிழக அரசு அனுமதி அளித்திருப்பதற்கு தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளார். தற்போது தமிழக அரசு அனுமதி அளித்திருப்பதற்கு நன்றி தெரிவித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"இறுதிக்கட்டப் பணிகளுக்கு அனுமதி அளித்துள்ள தமிழக அரசுக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் பெப்சி அமைப்பின் சார்பில் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். கடந்த 60 நாட்களாகவே தமிழ்த் திரையுலகம் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசு கொடுத்துள்ள இந்த தளர்வு சுமார் 10 முதல் 15 சதவீத தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது. நாங்கள் சின்னத்திரை படப்பிடிப்புக்கும் தளர்வு கேட்டிருந்தோம். ஆனால் சூழல் கருதி இறுதிக்கட்ட மற்றும் முதற்கட்டப் பணிகளுக்கு மட்டும் அனுமதி தந்துள்ளது. முதலில் அதற்கு நன்றி.

தற்போது அரசு அளித்துள்ள இந்த தளர்வை நமது உறுப்பினர்கள் அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அதாவது சமூக இடைவெளி, மருத்துவ - சுகாதார வசதிகளோடு நாம் பணிபுரிய வேண்டும். தயாரிப்பாளர்களுக்கும் நாங்கள் ஒரு வேண்டுகோள் முன்வைக்கிறோம். தமிழக அரசு முன்வைக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் ஏற்று இந்த தளர்வில் நடந்து கொள்வோம்.

எனவே தயாரிப்பாளர்கள் எங்களுடைய உறுப்பினர்கள் பணி செய்கின்ற இடங்களில், கண்டிப்பாக 5 அடி சமூக இடைவெளி மற்றும் மருத்துவ - சுகாதார வசதிகள் இருக்க வேண்டும். முககவசம் மற்றும் கையுறை ஆகியவை அவசியம் இருக்க வேண்டும். மேலும், டப்பிங் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் கம்யூட்டர் கருவிகள் சுகாதாரமான முறையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஏனென்றால் இந்த தளர்வில் பணிபுரியும் போது யாருக்காவது கரோனா தொற்று ஏற்பட்டால் அனைவருக்குமே இந்த தளர்வு ரத்து செய்யப்படும் என்ற அபாயம் உள்ளது. ஆகையால் அனைவரும் தொற்று இல்லாமல் நல்லமுறையில் பணிபுரிவோம்"

இவ்வாறு ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE