இறுதிக்கட்டப் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி: தயாரிப்பாளர்கள் நன்றி

By செய்திப்பிரிவு

திரைப்பட இறுதிக்கட்டப் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பதற்கு தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

கரோனா ஊரடங்கினால் தமிழ்த் திரையுலகில் எந்தவொரு பணியும் நடைபெறாமல் இருந்தது. இதனால் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தொழில்துறையினருக்குப் பல்வேறு விதிமுறைகளுடன் தொழில் தொடங்க அனுமதியளித்துள்ளது தமிழக அரசு.

இதனைத் தொடர்ந்து திரைப்பட இறுதிக்கட்டப் பணிகளுக்கு அனுமதியளிக்குமாறு தயாரிப்பாளர்கள், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனை ஏற்று இறுதிக்கட்டப் பணிகளுக்கு மட்டும் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. மே 11-ம் தேதி முதல் என்ன பணிகளுக்கு, எத்தனை பேர் பணிபுரியலாம் என்பதையும் அறிவித்துள்ளது.

தமிழக அரசு அனுமதி அளித்திருப்பதற்கு தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

"கரோனா பாதிப்பினால் 50 நாட்களுக்கு மேலாக தமிழ்த் திரைப்படத் துறை சம்பந்தப்பட்ட எந்த வேலைகளும் நடக்கவில்லை. இந்த நிலையில் கடந்த மே 4-ம் தேதி குறைந்தபட்சம் படப்பிடிப்பு இல்லாத பணிகளான இறுதிக்கட்டப் பணிகளுக்கு அனுமதி வழங்கினால், ஏற்கெனவே படப்பிடிப்பு முடிந்து இந்தப் பணிகளுக்காக 50 நாட்களாகக் காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் அவற்றை முடித்து, படங்களைத் தயார் செய்ய முடியும் என்று தங்களிடம் கோரிக்கை வைத்திருந்தோம்.

எங்களின் கோரிக்கையை கனிவாகக் கவனித்து உடனே நடவடிக்கை எடுத்து, நாங்கள் கேட்டுக்கொண்டது போலவே தமிழ்த் திரைப்படத் துறை இறுதிக்கட்டப் பணிகளை மே 11-ம் தேதி முதல் செய்து கொள்ள தாங்கள் அனுமதி அளித்து, தமிழ் சினிமாவைக் காக்கும் செயலை செய்ததற்காக எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நேரத்தில் எங்களின் கோரிக்கையை தங்களின் கவனத்திற்கு உடனே கொண்டு வந்து அதற்குத் தக்க நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளையும் செய்த அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்".

இவ்வாறு தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிக்கையை பாரதிராஜா, தாணு, டி.ஜி.தியாகராஜன், கேயார், கே.முரளிதரன், டி.சிவா, கே.ராஜன், கே.எஸ்.ஸ்ரீனிவாசன், பி.எல்.தேனப்பன், கதிரேசன், கமீலா நாசர், ஞானவேல்ராஜா, ஹெச்.முரளி, கே.விஜயகுமார், தனஞ்ஜெயன், எஸ்.ஆர்.பிரபு, ராஜசேகர் பாண்டியன், சஷிகாந்த், ஜே.எஸ்.கே, சி.வி.குமார், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE