யோசிக்கவைத்த ஒளிப்பதிவாளர்; ராஜமெளலியிடம் ஏற்பட்ட மாற்றம்

ஒளிப்பதிவாளர் ஒருவரால் இயக்குநர் ராஜமெளலி கோபப்படுவதைக் குறைத்துக் கொண்டுள்ளார்.

2004-ம் ஆண்டு ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'சை' படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர் செந்தில் குமார். அதற்குப் பிறகு ராஜமெளலி - செந்தில் குமார் இருவரும் இணைந்து தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வருகிறார்கள். பணியைத் தாண்டி இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் வலம் வருகிறார்கள்.

முன்பு ரொம்ப கோபப்படுவேன். இப்போது ரொம்ப கோபப்படுவதில்லை என்று இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார். அதற்குக் காரணம் ஒளிப்பதிவு செந்தில்குமார்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக ராஜமெளலி கூறியிருப்பதாவது:

"நான் கோபம் கொள்வேன். ஆனால் பொறுமை இழக்க மாட்டேன். நாம் சொல்லும் எளிய விஷயங்களை, வழிகாட்டுதலைக் கூட புரிந்து கொள்ளாமல் முட்டாள்தனமாகச் சிலர் நடக்கும்போது பெரும்பாலான சமயங்களில் கோபம் வரும்.

நீண்டகாலமாக என்னுடன் இருப்பவர் ஒளிப்பதிவாளர் செந்தில். ஒரு கட்டத்தில் அவர் என்னிடம், 'படக்குழு அதன் வலிமையை இயக்குநரிடமிருந்துதான் பெறுகிறது. நீங்கள் கோபம் கொள்ளும்போது படக்குழுவின் மீதிருக்கும் கட்டுப்பாட்டை இழக்கிறீர்கள்' என்றார். அது என்னை யோசிக்க வைத்தது. என்னால் ஒரு பிரச்சினையைத் தீர்க்க முடியாத நிலையிலும் நான் அதிகம் கோபம் கொள்கிறேன் என்பது எனக்குப் புரிந்தது.

அப்போதிலிருந்து நான் சற்று மாறியிருக்கிறேன். பத்து வருடங்களுக்கு முன்னால் கோபம் கொண்டு நான் படப்பிடிப்பில் எப்படிக் கத்துவேனோ அப்படி இப்போது செய்வதில்லை".

இவ்வாறு இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE