'மன்மத லீலை' கோட் குறித்த சுவாரசியப் பின்னணி: கமல் பகிர்வு

By செய்திப்பிரிவு

'மன்மத லீலை' படத்தில் பயன்படுத்தப்பட்ட கோட் குறித்த சுவாரசியப் பின்னணியை கமல் பகிர்ந்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளம் மூலம் நேரலைப் பேட்டியாகக் கொடுத்து வருகிறார்கள். இதில் கமல் - விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்ற நேரலைக் கலந்துரையாடல் நிகழ்ச்சி மே 2-ம் தேதி நடைபெற்றது.

இந்த நேரலைப் பேட்டியில், தனது பழைய படங்கள் நினைவுகள், அரசியல் வருகை, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார் கமல்ஹாசன். இதில் தனது ஒவ்வொரு படங்களில் வரும் பிரத்யேகப் பொருட்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார் கமல்.

அந்தப் பகுதி:

அபிஷேக்: 'விருமாண்டி' வாட்ச், 'நம்மவர்' கண்ணாடி, 'ஆளவந்தான்' முகமூடி இந்த யோசனைகள் எப்படி வந்தன?

கமல்: இதெல்லாம் சமீபத்தில் நடந்தவை. நீங்கள் இன்னும் பழைய படங்களைப் பற்றிக் கேட்கவில்லை. பாலசந்தர் சார், 'நீயே எதாவது நல்ல ட்ரஸ்ஸா போட்டுட்டு வந்துடு' என்பார். உடை வடிவமைப்புக்கு எல்லாம் தனி ஆட்கள் அப்போது கிடையாது. ஏனென்றால் பட்ஜெட் அவ்வளவு குறைவாக இருந்தது.

'மன்மத லீலை' படத்தில் ஒரு பிஸ்கட் நிற கோட்டை அணிந்திருப்பேன். அது அண்ணன் சந்திரஹாசனின் கோட். அவர் லண்டனிலிருந்து வாங்கி வந்திருந்தார். அதை எடுத்துப் போட்டுக்கொண்டு போனேன். அதற்குப் பேரே 'மன்மத லீலை' கோட் என்று ஆகிவிட்டது. நீயே வைத்துக்கொள் என்று கொடுத்துவிட்டார். நான் என் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு அதைப் போட்டுக்கொண்டு செல்வேன். என் குடும்பத்திலேயே அதை 'மன்மத லீலை' கோட் என்றுதான் கூறுவார்கள்.

முன்னால், சினிமா உடைகளுக்கு என்று ஒரு பாணி இருந்தது. எல்லாப் படங்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கும். சினிமாவில் அப்போது பெல் பாட்டம் என்று கேட்டாலும் தெரியாது. ஃபேஷனோடு தொடர்பில்லாமல் இருந்தார்கள். ஏன் இலக்கியத்தோடும் தொடர்பில்லாமல்தான் இருந்தார்கள்.

'16 வயதினிலே' படத்தின்போது ஏதோ ஒரு சட்டையைப் போட்டுக் கொள்ள வேண்டும் என ஒரு காக்கி நிற சட்டையைத் தந்தார்கள். அதை நான் பயங்கரமாகச் சிதைத்து, கல்லை வைத்து அடித்து, கிழித்தேன். நான் செய்வதை பாரதிராஜா பார்த்து ரசித்தார். 'கிறுக்கன்யா இவன்' என்று சொன்னார்.

இவ்வாறு கமல் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE