விருதுகள் முக்கியமா; வசூல் முக்கியமா? - இயக்குநர் ராஜமெளலி பதில்

By செய்திப்பிரிவு

தனது படங்களுக்கு விருதுகள் முக்கியமா அல்லது வசூல் முக்கியமா என்ற கேள்விக்கு இயக்குநர் ராஜமெளலி பதிலளித்துள்ளார்.

'பாகுபலி' படங்களின் வெற்றியால் உலகளவில் பிரபலமான இயக்குநராக மாறியுள்ளார் இயக்குநர் ராஜமெளலி. தற்போது 'இரத்தன் ரணம் ரெளத்திரம்' என்னும் படத்தை இயக்கி வருகிறார். இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், அலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ராஜமெளலி இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக 'பாகுபலி' படங்களை 1000 கோடியைத் தாண்டி வசூல் சாதனை புரிந்துள்ளது.

இதனிடையே தனது படங்களுக்கு "விருதுகள் முக்கியமா, வசூல் முக்கியமா" என்ற கேள்விக்கு இயக்குநர் ராஜமெளலி கூறியிருப்பதாவது:

"வசூல் தான் எப்போதும் முக்கியம். விருதுகள் என்னை ஆச்சரியப்படுத்தியதில்லை. ஆனால் வந்தால் ஒரு ஊக்கமாக ஏற்றுக்கொள்வேன். அது பற்றி அதிகம் யோசிக்க மாட்டேன். வசூல் என்பது சாதனைக்காக அல்ல. எவ்வளவு வசூலோ அவ்வளவு மக்கள் உங்கள் படத்தைப் பார்த்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.

எவ்வளவு அதிக வசூலோ அவ்வளவு அதிக மக்கள் அல்லது அவ்வளவு முறை படம் பார்க்கப்பட்டிருக்கிறது என்று பொருள். அதுதான் எனக்கு முக்கியம். பார்க்கும் எல்லோருக்குமே என் படம் பிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் வசூல் அதிகம் எனும்போது படம் பெரும்பாலானவர்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்கான அறிகுறியே"

இவ்வாறு ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE