'ஷீ ஹல்க்' திரைக்கதைப் பணிகள் நிறைவு: கதாசிரியர் அறிவிப்பு

பெண் ஹல்க் கதாபாத்திரத்தை வைத்து டிஸ்னி+ ஸ்ட்ரிமிங் தளத்துக்காக எடுக்கப்படவுள்ள 'ஷீ ஹல்க்' வெப் சீரிஸின் திரைக்கதை பணிகள் முடிந்தது என அதன் கதாசிரியர் டேனா ஷ்வார்ட்ஸ் கூறியுள்ளார்.

ஜெனிஃபர் வால்டர்ஸ் என்ற கதாபாத்திரமே ஷீ ஹல்காக உருவாகும். இது மார்வல் காமிக்ஸுக்காக ஸ்டான் லீ இணைந்து உருவாக்கிய கடைசி முக்கியக் கதாபாத்திரம். வால்டர்ஸ் ஒரு வழக்கறிஞர். ஹல்க் / ப்ரூஸ் பேனரின் உறவினர். இவருக்கு ப்ரூஸ் பேனரிடமிருந்து ரத்த மாற்று செய்யும்போது ஹல்க் சக்திகள் கிடைப்பது போல கதையில் இருக்கும். ஆனால் இவர் ஹல்காக மாறும்போது அவரது உண்மையான குணமும், புத்திசாலித்தனமும் மாறாது.

மார்வல் சினிமாடிக் உலகின் படங்களில் அறிமுகமான கதாபாத்திரங்களையும், மார்வல் காமிக்ஸைச் சேர்ந்த, இதுவரை திரைப்படங்களில் வராத சூப்பர்ஹீரோ கதாபாத்திரங்களையும் வைத்து டிஸ்னி தனித்தனியாகப் பல தொடர்களை திட்டமிட்டுள்ளது. இவை அனைத்துமே டிஸ்னியின் ஸ்ட்ரீமிங் சேவையில் மட்டுமே காணக் கிடைக்கும். 'ஷீ ஹல்க்' வெப் சீரிஸை எம்மி விருது வென்ற ஜெஸ்ஸிகா காவ் இயக்கவுள்ளார்.

இந்தத் தொடர் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கதாசிரியர் டேனா, "'ஷீ ஹல்க்' திரைக்கதை முடிந்தது. உங்களுக்குத் தெரிந்த எந்த இயக்குநராவது, நகைச்சுவை செய்யும், புத்தகங்கள் எழுது, நிறைய வரலாற்றுத் தகவல்களைத் தெரிந்து வைத்திருக்கும் கதாசிரியரைத் தேடினால் என்னைப் பற்றிச் சொல்லவும்" என்று பகிர்ந்துள்ளார்.

1980-களில் இந்த கதாபாத்திரம் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் காமிக்ஸில் முதலில் அறிமுகமானது. ஆனால் இப்போது இதன் வெப் சீரிஸ் வடிவம் எப்படி இருக்கும், யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது பற்றித் தெரியவில்லை. ஆனால் இதில், 'அவெஞ்சர்ஸ்' படங்களில் ஹல்காக நடித்த மார்க் ரஃபல்லோ நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய கரோனா நெருக்கடி முடிந்த பிறகே 'ஷீ ஹல்க்' தொடரின் படப்பிடிப்புத் தொடங்கவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE